விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 17 Nov 2021 9:33 PM IST (Updated: 17 Nov 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

விழுப்புரம்

கார்த்திகை மாதம் பிறப்பு

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை அய்யப்ப சாமி கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருந்து 42-ம் நாள் நடைபெறும் மண்டல பூஜைக்கு இருமுடி கட்டி செல்வது வழக்கம். நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப சாமியை வேண்டி பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினார்கள்.
இதையொட்டி விழுப்புரம் அருகே காணை சக்தி விநாயகர் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னதியில் அதிகாலை அய்யப்ப பக்தர்கள் காவி உடை அணிந்து பயபக்தியுடன் மாலை அணிந்து கொண்டனர். கோவில் குருசாமி, அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்.

மண்டல பூஜை

அதேபோல் விழுப்புரம் பூந்தோட்டம் முத்துமாரியம்மன், மருதூர் மாரியம்மன், ரெயிலடி விநாயகர், ரங்கநாதன் சாலை சித்தி விநாயகர், காமராஜர் வீதி அமராபதி விநாயகர், பெருமாள் கோவில் வீதியில் உள்ள கோட்டை விநாயகர், மேலத்தெரு மாரியம்மன், கீழ்ப்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
இவர்கள் அனைவரும் தினசரி அய்யப்ப சாமியை வேண்டி பூஜை செய்து 42-ம் நாள் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்க இருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் மாநாட்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் சன்னதியில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்பனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குருசாமி மாலை அணிவித்தார். 

இதேபோல் வடசிறுவள்ளூர் அய்யப்பன், எஸ்.வி.பாளையம் சாஸ்தா, தேவபாண்டலம் குந்தவேல்முருகன் கோவில் வளாகத்திலுள்ள அய்யப்பன் சன்னதி மற்றும் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயப்பாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அய்யப்பன் மற்றும் விநாயகர் கோவில்களில் நேற்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.  

Next Story