மருந்தாண்டான் வாய்க்கால் பாலம் இடிந்தது


மருந்தாண்டான் வாய்க்கால் பாலம் இடிந்தது
x

கனமழை எதிரொலியாக மருந்தாண்டான் வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்தது. மேலும் அரசு பள்ளியில் தண்ணீர் புகுந்தது.

லாலாபேட்டை
மழை
கரூரில் நேற்று காலையில் வெயில் அடித்தது. பின்னர் நேரம் செல்ல செல்ல வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. தொடர்ந்து மாலை சுமார் 4.30 மணியளவில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. 
இந்த மழையானது கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மாலை சுமார் 6.30 மணி வரை பெய்தது. இதனால் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
குளித்தலை
குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. கடந்த 15-ந்தேதி 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. நேற்று முன்தினம் மழை ஏதும் இல்லாத நிலையில் நேற்று மதியம் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து மாலையிலிருந்து மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.
 மேலும் விட்டு விட்டு மழை பெய்தது இதனால் சாலை மற்றும் தெருக்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. நேற்று முழுவதும் குளுமையான சூழ்நிலை நிலவியது.
பாலம் இடிந்து விழுந்தது
கரூர் மாவட்டம், லாலாபேட்டை வழியாக செல்லும் தென்கரை வாய்க்காலில் இருந்து மருந்தாண்டான் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் 1000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது. இந்த வாய்க்கால் மீது நெடுஞ்சாலை துறை மூலம் கடந்த 1920-ம் ஆண்டு காலகட்டத்தில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் நாளுக்கு நாள் வழுவிழந்து வந்த நிலையில் புதிய பாலம் அல்லது பாலத்தை செப்பணிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
தற்போது லாலாபேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் மருந்தாண்டான் வாய்க்கால் பாலத்தில் சிமெண்டு கட்டைகள் நேற்று மாலை இடிந்து விழுந்தது. 
மேலும் தொடர் கனமழைக்கு மண்சரிவு ஏற்பட்டால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளியில் தேங்கி நின்ற மழைநீர்
தோகைமலை ஒன்றிய பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நாகனூர் ஊராட்சி நல்லாகவுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவுபடி, நேற்று காலை ஒன்றிய ஆணையர் மங்கையர்கரசி, ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வு செய்தனர். பின்னர் மழைநீர் வடிவதற்கு கால்வாய் வெட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

Next Story