நத்தம் பஸ் நிலையத்தில் கண்டக்டரை தாக்கிய கார் டிரைவர் கைது
நத்தம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நத்தம்:
நத்தம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கண்டக்டர் மீது தாக்குதல்
திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து நத்தம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் டிரைவராக செல்வராஜ் (வயது 45), கண்டக்டராக வடமதுரையை சேர்ந்த சகஸ்வரதநாமம் (56) ஆகியோர் இருந்தனர். நத்தம் பஸ் நிலையத்திற்கு வந்ததும் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் நிலையத்தில் ஓரமாக நிறுத்துவதற்காக பஸ்சை டிரைவர் பின்புறமாக இயக்கினார். இதனை பஸ்சின் பின்புறமாக நின்று கண்டக்டர் சகஸ்வரதநாமம் கண்காணித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பஸ்சின் பின்னால் நத்தம் மூங்கில்பட்டியை சேர்ந்த கோபி (30) என்பவர் இடையூறு ஏற்படுத்தும் வகையில் காரில் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சகஸ்வரதநாமம் தட்டிக்கேட்டார். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கோபி, கண்டக்டர் சகஸ்வரதநாமத்தை தாக்கினார். இதில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
போராட்டத்தால் பரபரப்பு
இதுகுறித்து அறிந்த மற்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் என 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நத்தம் பஸ் நிலையத்தில் திரண்டனர். அப்போது அவர்கள் மற்ற பஸ்களை இயக்காமல் நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டக்டரை தாக்கிய கோபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்டக்டரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கார் டிரைவர் கைது
இதையடுத்து கண்டக்டர் சகஸ்வரதநாமம் கொடுத்த புகாரின்பேரில் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் நத்தம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பஸ் போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story