இலங்கை ரவுடி அங்கொடா லக்காவின் ரகசிய டைரி, கைத்துப்பாக்கி எங்கே?


இலங்கை ரவுடி அங்கொடா லக்காவின் ரகசிய டைரி, கைத்துப்பாக்கி எங்கே?
x
தினத்தந்தி 17 Nov 2021 11:03 PM IST (Updated: 17 Nov 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

அங்கொடா லக்காவின் ரகசிய டயரி, கைத்துப்பாக்கி எங்கே என்று, அவரது கூட்டாளிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை

அங்கொடா லக்காவின் ரகசிய டயரி, கைத்துப்பாக்கி எங்கே என்று, அவரது கூட்டாளிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை ரவுடி

இலங்கையை சேர்ந்த பிரபல ரவுடி அங்கொடா லக்கா கோவையில் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக அவரது காதலி அம்மானி தன்ஷி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இலங்கை ரவுடி அங்கொடா லக்கா போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பான ரகசிய டைரி, அவரது காதலியின் வீட்டில் இருந்து உள்ளது.

இந்த நிலையில் அங்கொடா லக்காவின் கூட்டாளியான இலங்கையை சேர்ந்த சனுக்கா தனநாயகா (வயது 38) என்பவர் கோவை வந்து, அங்கொடா லக்காவின் காதலி அம்மானி தன்ஷியை சந்தித்தார். 

அப்போது அவர் அம்மானி தன்ஷியை மிரட்டி போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ரகசிய டைரி மற்றும் அங்கொடா லக்கா பயன்படுத்திய கைத்துப்பாக்கியையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

காவலில் எடுத்து விசாரணை

இதனிடையே பெங்களூருவில் தலைமறைவாக இருந்த சனுக்கா தனநாயகா மற்றும் அவரது கூட்டாளி கோபால கிருஷ்ணன் (46) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சனுக்கா தனநாயகா மற்றும் கோபாலகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

யார்? யாருக்கு தொடர்பு

மேலும் அங்கொடா லக்கா எப்போது இலங்கையில் இருந்து தமிழகத் திற்கு தப்பி வந்தார். தமிழகத்தில் யார்?, யாருடன் அவர் தொடர்பில் இருந்தார்.

அங்கொடா லக்காவிற்கு தேவையான ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்தது யார்?, அவரது காதலி வீட்டில் எடுத்து செல்லப்பட்ட போதை பொருள் கடத்தல் தொடர்பான ரகசிய டயரி, கைத்துப்பாக்கி உள்ளிட்டவை எங்கு உள்ளது?, கடத்தி வரப்பட்ட போதை பொருள் தமிழகத்தில் யார், யாருக்கு விற்கப்பட்டது. அவரை யார், யார் சந்தித்து பேசினார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story