மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்
திருப்பத்தூர் அருகே கனமழையால் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. மாணவ, மாணவிகள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே கனமழையால் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. மாணவ, மாணவிகள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.
தொடர் மழை
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. சில பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் ஒரு நாள் மட்டும் ஓய்ந்திருந்த மழை நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் இடைவிடாது 3 மணி நேரம் கொட்டிய கனமழையால் எங்கு பார்த்தாலும் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது.
அதைத்தொடர்ந்து இரவு 10 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஒடியது.
கயிறு கட்டி மீட்பு
நேற்று மதியமும் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. தொடர்மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஒடியது.
திருப்பத்தூர் தாலுகா கொரட்டி கிராமத்தில் இருந்து தண்டுகானூர், தண்டுகானூர் காலனி, உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்குச் செல்லும் வழியில் பம்பாற்றில் இருந்து செல்லும் கிளை ஆறுகளுக்கு நடுவே தரைப் பாலம் உள்ளது.
நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழை காரணமாக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு மேம்பாலத்திற்கு மேல் வெள்ளம் சென்றது, இதனை அறியாத பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் வழக்கம் போல தரை பாலத்தை கடந்து செல்ல முயன்ற போது வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.
இதனை பார்த்த பொது மக்கள் அவர்களை காப்பாற்ற ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக கரைப் பகுதிக்கு லாரி எடுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டது. அந்த லாரியில் தாம்புகயிறு கட்டி மறுபக்கம் டெலிபோன் கம்பத்துடன் பலமாக கட்டி அணைக்கப்பட்டது.
மாணவ-மாணவிகள் கயிற்றை பிடித்தவாறு தரை பாலத்தை கடந்து வரவைத்து காப்பாற்றப்பட்டனர்.
கொரட்டி, திருப்பத்தூர் செல்ல வேறு பாதை இல்லாததால் உடனடியாக தரை பாலத்தை உயர்த்தி கட்டி தர வேண்டும் கலெக்டருக்கு பொதுமக்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஆலங்காயம்- 28, ஆம்பூர்- 5.40, நாட்டறம்பள்ளி- 52, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை- 48.90, வாணியம்பாடி- 23ீ, திருப்பத்தூர் 46.5.
Related Tags :
Next Story