கும்பகோணத்தில் பயங்கரம்: மோட்டார் சைக்கிளை வழிமறித்து பட்டதாரி வாலிபர் வெட்டிக்கொலை கொலையாளிகளை கைது செய்யக்கோரி உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்


கும்பகோணத்தில் பயங்கரம்: மோட்டார் சைக்கிளை வழிமறித்து பட்டதாரி வாலிபர் வெட்டிக்கொலை கொலையாளிகளை கைது செய்யக்கோரி உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Nov 2021 12:29 AM IST (Updated: 18 Nov 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில், மோட்டார் சைக்கிளை வழிமித்து பட்டதாரி வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொன்றனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவருடைய உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:-

கும்பகோணத்தில், மோட்டார் சைக்கிளை வழிமித்து பட்டதாரி வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொன்றனர்.  கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவருடைய உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பட்டதாரி வாலிபர் வெட்டிக்கொலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் யோகேஸ்வரன்(வயது 25). பி.காம் பட்டதாரி. இவர் தனது நண்பர் நந்தகுமார் (22) என்பவருடன் ேநற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அதில் பயணம் செய்த யோகேஸ்வரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க முயன்ற நந்தகுமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யோகேஸ்வரனை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு யோகேஸ்வரன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நந்தகுமாருக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

உடலுடன் சாலை மறியல்

யோகேஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை நேற்று மதியம் உறவினர்கள் கும்பகோணத்துக்கு எடுத்து வந்தனர். இந்த நிலையில் அவரை அரிவாளால் வெட்டிக்கொன்றவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவருடைய உடலுடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், ஆதரவாளர்கள் கும்பகோணத்தில் உள்ள ஒரு தியேட்டர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், ராமமூர்த்தி, மகாலட்சுமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிந்தனர். 

பேச்சுவார்த்தை

தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட யோகேஸ்வரனின் ஆதரவாளர்கள் மற்றும்  இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி, நகரசபை முன்னாள் கவுன்சிலர்கள் பெருசு ராமமூர்த்தி, முருகானந்தம், நாட்டாண்மை செந்தில்குமார் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது, ‘யோகேஸ்வரனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையிட்டனர். 
இதையடுத்து கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story