திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடு உயர்வு


திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
x

தொடர் மழை காரணமாக திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

திருச்சி, நவ.18-
தொடர் மழை காரணமாக திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
இயல்பைவிட அதிக மழை
தமிழகத்தில் இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் 25-ந்தேதி வரை தென்மேற்கு பருவமழை பெய்தது. அதுவிலகிய அன்றே வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் தொடங்கிவிட்டது. அக்டோபர் மாதத்தில் வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்ட இயல்பை விட 29 சதவீதம் அதிகமாக மழை பதிவானது.
அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் மாதம் பதிவான சராசரி மழை அளவு 22.86 சென்டிமீட்டர் ஆகும். இயல்பான மழை அளவு 17.76 சென்டிமீட்டர் ஆகும். குறிப்பாக அக்டோபர் மாதத்தின் 2-வது வாரத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 13.67 சென்டிமீட்டர் மழை பதிவானது.
கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் (அடைப்புக்குள் இயல்பு மழை அளவு) வருமாறு:- கரூர் மாவட்டம்- 219.1 (129.2), புதுக்கோட்டை-243.8 (146.4), அரியலூர்- 305.3 (187.5), திருச்சி-226.4 (158.5), பெரம்பலூர்-241.6 (176.9) ஆகும். இதன்படி பார்த்தால் கரூரில் 70 சதவீதமும், புதுக்கோட்டையில் 66 சதவீதமும், அரியலூரில் 63 சதவீதமும், திருச்சியில் 43 சதவீதமும், பெரம்பலூரில் 37 சதவீதமும் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக பெய்த மழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு (2020) அக்டோபர் மாதத்தை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தமிழக நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துறையினர் மாநிலம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கிணறுகள் மூலம் மாதந்தோறும் நிலத்தடி நீர் மட்டத்தைக் கணக்கிட்டு வருகிறார்கள்.
இவர்கள் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 3.78 மீட்டரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 3.32 மீட்டரும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதுபோல் 6 மாவட்டங்களில் 2 மீட்டருக்கு அதிகமாகவும், 11 மாவட்டங்களில் 1 மீட்டருக்கு அதிகமாகவும், 9 மாவட்டங்களில் 1 மீட்டருக்கு குறைவாகவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை, திருச்சி
இதுபோல் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்மட்டம் 1.45 மீட்டரும், திருச்சி மாவட்டத்தில் 1.09 மீட்டரும்,  அரியலூர் மாவட்டத்தில் 0.67 மீட்டரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 0.65 மீட்டரும், கரூர் மாவட்டத்தில் 0.13 மீட்டரும் உயர்ந்துள்ளது.
அதே நேரம் 8 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 1.58 மீட்டரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1.47 மீட்டரும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

Next Story