‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மருதாண்டக்குறிச்சி சந்தோஷ்நகர் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதி மக்களுக்கு லாரி மூலம் தண்ணீர் வழங்கினர். மேலும், குடிநீர் குழாயில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நவமணிவேல், சந்தோஷ்நகர், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அயன் ரெட்டியபட்டி பஞ்சாயத்து மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள குப்பை தொட்டி உடைந்து 6 மாதங்கள் ஆகிறது. ஆனால் புதிய குப்பை தொட்டி வைக்காததால் அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் காற்று காரணமாக சாலையோரம் வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் புதிய குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலு, திருச்சி.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தை சுற்றி பல கடைகள் புற்றீசல் போல் முளைக்கிறது. மேலும் கடைகளில் இருந்து சேகரமாகும் உணவு கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதுடன், சாலையோரம் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூவலிங்கம், ஜே.கே. நகர், திருச்சி.
தார்சாலை அமைக்க வேண்டும்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஒன்றியம் நவலூர்குட்டபட்டு பஞ்சாயத்துக்குட்பட்ட முத்துநகரில் இதுவரை சாலை அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் தார்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா, முத்து நகர், திருச்சி.
பழுதடைந்த மின்கம்பம்
திருச்சி மேல புலிவார் ரோடு தேவர் ஹால் அருகே உள்ள மின்கம்பம் விரிசல் ஏற்பட்டு உள்ளது. பலத்த காற்று வீசினால் இந்த மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாகிர் உசேன், திருச்சி.
அடிப்படை வசதி செய்து தர வேண்டும்
திருச்சி-தஞ்சை ரோடு 7-வது வார்டுக்குட்பட்ட லட்சுமிபுரம் 2-வது தெருவில் சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி செய்து தரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் இங்குள்ள காலி மனைகளில் மழைநீர் தேங்குவதால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா, திருச்சி.
உடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி மேலத்தெருவில் உள்ள பாலம் உடைந்து பல மாதங்களாக சரிசெய்ய வில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், அங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பாலத்தை சீரமைப்பதுடன், சாலையையும் சீரமைக்க வேண்டும்.
கணபதி, முசிறி.
பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் ரெட்டிமாங்குடி, குளக்குடி, பி.கே.அகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் குரங்கு, காட்டு பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
கிருபா, புள்ளம்பாடி.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வாசல் முன்பு மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் சேற்றில் வழுக்கி விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி முன்பு மழைநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலசந்திரன், துறையூர்.
Related Tags :
Next Story