மயானத்திற்கு பாதை வசதி கேட்டு பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்


மயானத்திற்கு பாதை வசதி கேட்டு பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Nov 2021 1:07 AM IST (Updated: 18 Nov 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே மயானத்திற்கு பாதை வசதி கேட்டு பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன் பத்தை ஊராட்சியை சேர்ந்த புதுவலசல் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மயானம் அதே கிராமத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவில் பாதரங்குளம் அருகே உள்ளது. இந்த மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் இந்த குளத்தை தாண்டித்தான் செல்ல வேண்டும். 
 மழை காலங்களில் யாராவது இறந்தால் அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மயானத்திற்கு பாதை வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இன்றுவரை பாதை வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிணத்துடன் சாலை மறியல்
இந்தநிலையில் புதுவலசல் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று இறந்தார். ஆனால், மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள பாதரங்குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் மூதாட்டியின் உடலை எடுத்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் மயானத்திற்கு பாதை வசதி கேட்டு புதுவலசலில் உள்ள கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் கொட்டும் மழையில் சவவண்டியில் ஏற்றப்பட்ட மூதாட்டியின் பிணத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story