பெங்களூருவில் ஆஸ்திரேலியாவின் தூதரகம் அமைக்கப்படும்; அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு


பெங்களூருவில் ஆஸ்திரேலியாவின் தூதரகம் அமைக்கப்படும்; அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 1:52 AM IST (Updated: 18 Nov 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஆஸ்திரேலியாவின் தூதரகம் அமைக்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிததுள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் ஆஸ்திரேலியாவின் தூதரகம் அமைக்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன்அறிவிததுள்ளார்.

உறவை பலப்படுத்துவோம்

பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் காணொலியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவுடன் அனைத்து நிலையிலும் ஆஸ்திரேலியா உறவை மேலும் பலப்படுத்துவோம். புதுமையை கண்டுபிடிப்பவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழில் முதலீட்டாளர்களுடன் உறவையும் பலப்படுத்துவோம். இருநாடுகளுக்கு இடையேயான இந்த உறவு வலுவானது. பெங்களூரு உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் தொழிநுட்ப நகரம். இதில் நாங்களும் பங்கு வகிக்க விரும்புகிறோம்.

பொருளாதார வளர்ச்சி

அதனால் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவின் தூதரகம் அமைக்கப்படும். இதன் மூலம் இந்தியாவுடனான ராஜதந்திர தொடர்பு மேலும் அதிகரிக்கும். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா தனது முதல் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துகிறது. இதில் பிரதமர் மோடி நாளை (அதாவது இன்று) பங்கேற்று பேசுகிறார். வளர்ச்சி, முக்கிய சைபர் தொழில்நுட்பங்கள் சார்ந்த விஷயம் குறித்து நடைபெறும் சர்வதேச மாநாடு. முக்கிய தொழில்நுட்பத்திற்காக ஆஸ்திரேலியா ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. அதை இங்கே அறிவிக்கிறேன்.

 இது முக்கியான தொழில்நுட்பத்தின் வடிவமைப்பை சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய கொண்டு செல்கிறது என்பதை இது காட்டுகிறது.
தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகள், நல்ல பொருளாதார வளர்ச்சி, அரசியல், ராணுவ அதிகார பலம் கொண்ட நாடுகளாக வரும். வரும் ஆண்டுகளில் அத்தகைய நாடுகள் உலக அளவில் செல்வாக்கு மிகுந்த நாடுகளாக இருக்கும். இந்தியா தொழில்நுட்பத்தில் பலம் கொண்ட நாடாக வளர்ந்து வருகிறது. முழுமையான செயல் திட்டத்தில் தொழில்நுட்பம் முன்னணியில் உள்ளது. இது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு நானும், பிரதமர் மோடியும் கையெழுத்து இட்டோம்.

தூய்மையான எரிசக்தி

இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சைபர் தொழில்நுட்பம் மற்றும் மிக முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து நாங்கள் 2 பேரும் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். எங்களின் தொழில்நுட்ப வினியோக நடைமுறை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். கனிம சுரங்க விஷயத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.

தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பத்திற்கு தேவையான லித்தியம் போன்ற முக்கியமான தாதுக்கள், அரிதான தாதுக்கள் குறித்த விஷயத்தில் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சியிலும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு நாங்கள் உதவி செய்வது பெருமையாக உள்ளது.

சவால்களுக்கு தீர்வு

கல்வி, ஆராய்ச்சி துறைகளிலும் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துகிறோம். ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடனும் பணியாற்றி வருகிறோம். இந்த ஒரே கருத்துடைய 4 நாடுகளும் இணைந்து பெரிய சவால்களுக்கு தீர்வு காண முயற்சி செய்யும். உலக தொழில்நுட்ப விதிமுறைகளை வகுப்பது குறித்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். தொழில்நுட்பத்தின் பலம், அதன் தேவையை நாங்கள் கடந்த 18 மாதங்களில் உணர்ந்துள்ளோம்.
இவ்வாறு ஸ்காட் மோரிசன் பேசினார்.

Next Story