வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவருக்கு 2 ஆண்டு ஜெயில்
வரதட்சணை கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்தவர் அங்கப்பன் என்ற ஆலயமணி (வயது 60). இவர் அம்பையில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பார்வதி.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பார்வதியிடம் அங்கப்பன் வரதட்சணை கேட்டார். இதனால் மனமுடைந்த பார்வதி கடந்த 11-12-2010 அன்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் உடல்கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பார்வதியின் அண்ணன் சிவசுப்பிரமணியன் தனது தங்கை சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கை நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கப்பனை கைது செய்து நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள், சாட்சிகளை இன்ஸ்பெக்டர் உலகராணி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகா செல்வி, ஏட்டு சிபுக்குமார் ஆகியோர் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.
வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட அங்கப்பனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story