கோவில் குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி


கோவில் குளங்களில் கழிவுநீர் கலப்பதை  தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 18 Nov 2021 3:06 AM IST (Updated: 18 Nov 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

கோவில் குளங்களில் கழிவுநீர் கலப்பதையும், குப்பை கொட்டுவதையும் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதற்கு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை
கோவில் குளங்களில் கழிவுநீர் கலப்பதையும், குப்பை கொட்டுவதையும் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதற்கு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோவில் குளங்களில் கழிவுநீர்
இந்து தர்ம பரிஷத் அமைப்பின் டிரஸ்டி கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:-
இந்து மதத்தில் உள்ள உண்மைகள், அடிப்படை உரிமைகள் போன்றவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவது, இந்து ஏழை மக்கள் பிற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பது போன்ற பணிகளில் எங்கள் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றின் மீது மக்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் 38,615 கோவில்கள் உள்ளன. அவற்றிற்கு சொந்தமாக 4.22 லட்சம் ஏக்கர் நிலங்கள், 22 ஆயிரத்து 600 கட்டிடங்கள், பல கோடி ரூபாய் ரொக்கம், வைரம் உள்ளிட்ட நகைகளும், ஆயிரக்கணக்கான குளங்களும் உள்ளன.
புனிதத்தன்மை கெடுகிறது
தமிழக கோவில்களில் உள்ள பெரும்பாலான குளங்களில் கழிவு நீர் கலக்கிறது. குப்பை கொட்டப்படுகிறது. இதனால் கோவில் குளங்களின் புனிதத்தன்மை கெடுகிறது. இதை தடுக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான குளங்களை தூர்வாரி அவற்றை புதுப்பித்து இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
கோவில் குளங்களில் கழிவுநீர் கலப்பது, குப்பை கொட்டும் நபர்களை கண்டறிந்து கடும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
பதில் அளிக்க உத்தரவு
அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், கோவில் குளங்களை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றறிக்கையின்படி குளத்தில் குப்பை கொட்டுவதை தடுத்தல், கழிவு நீர் கலப்பதை தடுத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்டவைகளை செயல்படுத்தி வருகிறோம் என கூறினார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், கோவில் குளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். விசாரணையை டிசம்பர் மாதம் 15-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story