‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
இரும்பு வேலி அமைக்கப்பட்டது
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சுக்கம்பட்டி ஊராட்சியில் காந்திநகர் காலனி 8-வது வார்டு பகுதியில் பொதுகிணறு ஒன்று ஆபத்தான நிலையில் இருந்தது.. இந்த கிணற்றை சுற்றி சுற்றுசுவர் கட்ட வேண்டும் என்று கடந்த 16-ந் தேதி ‘தினத்தந்தி’யின் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்தனர். அந்த கிணற்றை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் பாராட்டு தெரிவித்தனர்.
-செ.சுரேஷ், சுக்கம்பட்டி, சேலம்.
===
சேறும், சகதியுமான சாலை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரிச்சிக்கொட்டாய் கிராமத்தில் 50 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தை கடந்து தான், அதன் அருகில் உள்ள 2 கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இதற்கான பாதை தற்போது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த பாதையில் சென்று வர மாணவ- மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த பாதையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிராம மக்கள், பெரிச்சிக்கொட்டாய், தர்மபுரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நாச்சிக்குப்பம் ஊராட்சி ஜோடுகொத்தூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு முறையாக சாலை வசதி இல்லை். இதனால் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. வீடுகளில் இருந்து வரும் சாக்காடை கழிவு நீரும், மழைநீரும் சாலைகளிலும் தெருக்களிலும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராமத்தில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ஜோடுகொத்தூர், கிருஷ்ணகிரி.
===
கூடுதல் பஸ் வசதி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா கடம்பூர் கிராமத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கெங்கவல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவர்கள் மாலை 5.30 மணிக்கு சிறப்பு வகுப்புகள் முடித்துவிட்டு வருவதற்கு பஸ் வசதி இல்லாததால் நடந்தே வீட்டுக்கு வருகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதி அந்த பகுதியில் கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும்.
-இரா.பெரியசாமி, கடம்பூர், சேலம்.
===
வேகத்தடை வேண்டும்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்பட்டி வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் சாலையை பொதுமக்கள் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி நிழற்கூடம் அருகில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், வெள்ளை பிள்ளையார் கோவில், நாமக்கல்.
===
கால்வாய் வசதி அமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா குண்டாசிகாடு ஊரில் மழைநீர் வெளியேற வாய்க்கால் வசதி இல்லாததால் மழைநீர், கழிவு நீருடன் கலந்து வீட்டிற்குள் புகுந்துவிடுகிறது. துர்நாற்றம் வீசுவதுடன் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.. இதனால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து மழைநீர் வெளியேற வழி செய்ய வேண்டும்.
-கிருபா, குண்டாசிகாடு, சேலம்.
===
நோய் பரவும் அபாயம்
சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெரு 42-வது வார்டு அருந்ததியர் காலனியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடுகாடு மிகவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அந்த பகுதியில் பன்றிகள் அசுத்தம் செய்வதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், அருந்ததியர் காலனி, சேலம்.
===
கழிப்பிட வசதி
சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடக்க இருக்கிறது. வெளியூர் செல்லும் பயணிகள் கழிப்பிட வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகளின் வசதிக்காக கழிப்பட வசதி செய்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், வாழப்பாடி, சேலம்.
====
குவிந்து கிடக்கும் குப்பைகள்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா உழவர்சந்தை அருகில் சுகாதாரமற்ற முறையில் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி குப்பைத்தொட்டி வைத்து சுகாதாரமாக இருக்க செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
-கார்த்திக், பென்னாகரம், தர்மபுரி.
===
Related Tags :
Next Story