ஓசூரில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூரில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூரில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையம்
ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில் குமுதேபள்ளி அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் ஏ.டி.எம். மையத்திற்குள் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் புகுந்து எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றார். ஆனால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதனால் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
போலீஸ் வலைவீச்சு
இந்த கொள்ளை முயற்சி குறித்து வங்கியின் முதன்மை மேலாளர் செந்தில்நாயகனபிள்ளை, ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஏ.டி.எம். மையத்திற்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து ஏ.டி.எம். மையத்தில் இருந்த 2 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த நபர் வெளியே சென்றதும், அதில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியதும் தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story