‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 18 Nov 2021 2:18 PM IST (Updated: 18 Nov 2021 2:18 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாழடைந்த பயணிகள் நிழற்குடை அகற்றம்



திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை பாழடைந்து ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அந்த நிழற்குடை இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

இருள் மறைந்தது; வெளிச்சம் கிடைத்தது

காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் வீரமாகாளி அம்மன் கோவில் தெருவில் 2 மின்கம்ப விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருள் சூழ்ந்து காணப்பட்ட பகுதிக்கு தற்போது வெளிச்சம் கிடைத்துள்ளது.

புதிய மின்கம்பத்தால் மக்கள் மகிழ்ச்சி...

சென்னை நங்கநல்லூர் ரகுபதி நகர் 3-வது தெருவில் உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு அங்கு புதிய மின்கம்பத்தை நட்டு அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

குப்பை குவியலும்.., கொசுக்கள் தொல்லையும்..



சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் இமயம் காலனி முதல் தெரு குப்பைமேடு போன்று காட்சி அளிக்கிறது. தெருவின் இருபுறங்களிலும் குப்பை குவியலாக இருக்கிறது. இதனால் கொசுக்கள் தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிட வேண்டும். இனி மேல் இங்கு குப்பைகள் சேராத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

- விஜயராஜ், அண்ணாநகர்.

ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிரமம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியம் வழிதிகைமேடு ஊராட்சி கிராம சேவை மையத்தில் தற்போது ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு மழைநீர் சூழ்ந்து நிற்பதால் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

- பொன் மோகன்ராஜ், வழிதிகைமேடு.

சாக்கடை தண்ணீரும்... அலங்கோலமான தெருவும்...

சென்னை கொளத்தூர் கண்ணகி நகர் கம்பர் தெருவில் மழை நீருடன் சாக்கடை தண்ணீரும் கலந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் கடுமையாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாக உள்ளது. கால் வைக்க முடியாத அளவுக்கு தெருவே அலங்கோலமாகவும், அசுத்தமாகவும் இருக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ஜெகதீஷ் குமார், கொளத்தூர்.

அகற்றப்படாத மரத்தால் இடையூறு



சென்னை மாநகராட்சி 84-வது வட்டம் கே.ஆர்.நகர் கொரட்டூர் பூங்காவில் பெரிய மரம் சாய்ந்து விழுந்துள்ளது. இந்த மரம் விழுந்து நீண்ட நாட்களாகியும் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு இடையூறாக இருக்கிறது.

- கே.ஆர்.நகர் குடியிருப்போர் நல சங்கம்.

இருள் சூழ்ந்த சாலை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆனந்த் நகர் பிரதான சாலையில் உள்ள மின் கம்பங்களில் கடந்த 2 மாத காலமாக மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த இடம் பாம்புகள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். எனவே இரவு நேரத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

- ஆனந்த் நகர் மக்கள்.

மின் கம்பம் சேதம்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம் அகரம் தென் ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்பாபுரம் மெயின் ரோட்டில் பல மாதங்களாக மின் கம்பத்தின் கான்கிரீட் உதிர்ந்து எலும்புக்கூடுபோல கம்பிகள் தெரிகிறது. அந்த மின் கம்பத்தில் இருந்து 4 பக்கமும் எஸ்.டி., எல்.டி. சப்ளைகள் சென்று கொண்டிருக்கிறது. எனவே உடனே உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

- செ.அஜய்குமார், கஸ்பாபுரம்.

தெருநாய்கள் தொல்லை

செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட திருமலை நகர் 2-வது தெரு முதல் மெயின் ரோடு, 3-வது தெரு ஆகிய இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.

- பொதுமக்கள்.

பன்றிகள் நடமாட்டம் அதிகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் புதிய பாலாஜி நகர், கணபதி நகர், சிங்காரத் தோட்டம் பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குப்பைகளை கிளறுவது, மண்களை கிளறுவது என்று பன்றிகள் பண்ணும் இம்சை தாங்க முடியவில்லை. பன்றிகள் கடித்துவிடும் என்ற அச்சத்தால் குழந்தைகளை வெளியே அனுப்ப தயக்கமாக உள்ளது. எனவே இப்பகுதியில் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள்.

மின்சார வயரில் உரசும் மரக்கிளை



சென்னை வில்லிவாக்கம் அம்பேத்கார் தெருவில் தனியார் பள்ளிக்கூடம் அருகில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் வயர்கள் மரத்தின் மீது சாய்ந்து அச்சுறுத்தும் விதமாக உள்ளது. பள்ளி மாணவர்கள் செல்லும் வழி என்பதால், மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

- ஜார்ஜ் சாலமன், வில்லிவாக்கம்.

Next Story