9 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி


9 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 18 Nov 2021 7:26 PM IST (Updated: 18 Nov 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 9 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 9 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

9-ம் கட்ட முகாம்

நீலகிரி மாவட்டத்தில் 9-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 266 நிலையான தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. நீலகிரியில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்ததால் மையங்களில் தடுப்பூசி செலுத்த குறைந்த மக்களே வந்தனர். இதனால் சில மையங்கள் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

தொடர்ந்து செவிலியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மையங்களில் இருந்து தொலைதூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த 20 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

2-வது டோஸ் தடுப்பூசி

இந்த பணியில் மொத்தம் 286 முகாம்களில் 1,144 பணியாளர்கள் ஈடுபட்டனர். முதல் டோஸ் செலுத்தி குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தி அடைந்தவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தனர். அவர்களது செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

வழக்கமாக விடுமுறை நாட்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும். அப்போது சுற்றுலா தலங்களுக்கு அதிகம் பேர் வருவதால் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள். வார நாட்களில் முகாம் நடந்ததால் சுற்றுலா தலங்களில் தடுப்பூசி செலுத்த சுற்றுலா பயணிகள் முன் வரவில்லை. இருப்பினும் பிற இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒத்துழைப்பு

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரியில் இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரத்து 547 பேர் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். 3 லட்சத்து 93 ஆயிரத்து 451 பேர் 2-வது டோஸ் போட்டுக்கொண்டனர். இதுவரை மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 998 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தகுதியான நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா இல்லாத நீலகிரியை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story