சர்வதேச நூல் கண்காட்சி
சர்வதேச நூல் கண்காட்சி
திருப்பூர்
பெங்களுரூவை சேர்ந்த எஸ்.எஸ்.டெக்ஸ்டைல்ஸ் மீடியா நிறுவனம் ஆண்டுதோறும் யார்னெக்ஸ் மற்றும் டெக்ஸ் இந்தியாவுடன் இணைந்து சர்வதேச நூல் கண்காட்சியை திருப்பூரில் நடத்தி வருகிறது. 19வது யார்னெக்ஸ் மற்றும் 11வது டெக்ஸ் இந்தியா துணி கண்காட்சி அவினாசி அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது.
கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், நிட்மா தலைவர் ரத்தினசாமி, டிப் சங்கத் தலைவர் மணி, ஏ.இ.பி.சி. செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டனர். எஸ்.எஸ்.டெக்ஸ்டைல்ஸ் மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
இந்த கண்காட்சியில் புதுடெல்லி, மும்பை, பெங்களுரூ, சூரத், லூதியானா, குர்கான், செகந்திராபாத், ஆமதாபாத், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் என மொத்தம் 112 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பருத்தி, கம்பளி, பட்டு, லினென், டெனீம், பாலியெஸ்டர், விஸ்கோஸ் என பல்வேறு நூலிழைகள், துணி ரகங்கள், ஆயத்த ஆடை உற்பத்திக்கு தேவையான பட்டன், ஜிப், லேபிள், லேஸ், ஹேங்கர் ரகங்கள் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்புக்கு தேவையான நூலிழை, துணி, அக்சசரீஸ்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக செயற்கை நூலிழைகள், கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து நூலிழை தயாரித்து பாலியெஸ்டர் ஆடைகளை தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனர். அதுபோல் காகிதத்தில் பெண்களுக்கான விதவிதமான கைப்பைகளையும் தயார் செய்து வைத்திருந்தனர். இவற்றை தண்ணீரில் கழுவி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தனர். அதுபோல் சணலால் ஆன தொட்டிகள் செடி வளர்ப்பில் பயன்படுத்துவதற்கு வைத்திருந்தனர். இந்த கண்காட்சியில் அதிகப்படியாக செயற்கை நூல் அதிக அளவில் அரங்கில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த கண்காட்சியை திருப்பூர் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஜாப்ஒர்க் துறையினர் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. நாளை (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியை பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து கண்காட்சிக்குள் வர்த்தகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
Related Tags :
Next Story