ஆட்டோவுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி பலி


ஆட்டோவுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி பலி
x
தினத்தந்தி 18 Nov 2021 8:01 PM IST (Updated: 18 Nov 2021 8:01 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது ஆட்டோவுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்தார்.

குடிமங்கலம்
உடுமலை அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது ஆட்டோவுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்தார். மரக்கிளையை பிடித்து அவருடைய மகன் உயிர் தப்பினார்.
வெள்ளப்பெருக்கு
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் நேற்று முன் தினம் மாலை முதல் இரவு வரை மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் பகுதியில் கொட்டித் தீர்த்த மழையால் உப்பாறு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஓடையில் அனிக்கடவு-வாகைத்தொழுவு இடையே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு 4 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
சரக்கு ஆட்டோ
இந்த நிலையில் அனிக்கடவு சலவைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னச்சாமி (வயது 65), தனது மகன் செல்வக்குமாருடன் (42), சரக்கு ஆட்டோவில் வழக்கம்போல் வாகைக்தொழுவு அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். 
அப்போது அவர்கள் தரைப்பாலத்தை கடக்க முயன்றனர். இரவு நேரம் என்பதால் தரைப்பாலத்தின் மேல் எத்தனை அடி உயரத்திற்கு வெள்ளம் செல்கிறது என அவர்களால் கணிக்க முடியவில்லை. எப்படியும் தரைப்பாலத்தை கடந்து சென்று விடலாம் என்று செல்வக்குமார் ஆட்டோவை ஓட்டியுள்ளார்.
ஆனால் தரைப்பாலத்தில் பாதி தூரம் சென்றதும் ஆட்டோவை வெள்ளம் இழுத்து சென்றது. இதனால் தந்தையும், மகனும் ஆட்டோவுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.  
தந்தை பலி
இதில் செல்வக்குமார் அருகிலிருந்த மரக்கிளையை பிடித்து உயிர் தப்பினார். ஆனால் சின்னச்சாமியை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதுகுறித்து உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு செல்வக்குமார் தகவல் தெரிவித்தார். உடனே  நிலைய அலுவலர் அரிராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சின்னச்சாமியை தேடினர். 
ஆனால் இரவு நேரம் என்பதால் சின்னச்சாமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினர் நேற்றுகாலை உப்பாறு ஓடை ஓரமாக சின்னச்சாமியை தேடினர். அப்போது அங்கு சின்னச்சாமி பிணமாக கிடந்தார். இதையடுத்து சின்னச்சாமியின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இது குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story