இலங்கை தமிழர்கள் 37 பேருக்கு புதிய வீடுகள்
இலங்கை தமிழர்கள் 37 பேருக்கு புதிய வீடுகள்
ஊத்தங்கரை, நவ.19-
இலங்கைத்தமிழர்கள் 37 பேருக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் காந்தி கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய வீடுகள்
தமிழ்நாட்டில் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிதாக 3 ஆயிரத்து 510 வீடுகள் ரூ.142 கோடியே 16 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வேலூரில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அந்த வகையில் ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 572 பேருக்கு ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் துணிகள், 174 பேருக்கு ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 590 மதிப்பில் பாத்திரங்கள், 70 பேருக்கு ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 945 மதிப்பில்கியாஸ் அடுப்பு இணைப்புகள், 11 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாதாந்திர உதவி தொகைகள் பெறுவதற்கான ஆணைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்
மேலும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 37 பேருக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டிதரப்படும். இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.
இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார்.
தொடர்ந்து ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் தளபதிநகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட உயர் மின்கோபுர விளக்கு, தெருவிளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். மேலும் 6 வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
திட்டப்பணிகள்
இதுதவிர ரூ.57 லட்சத்து 61 ஆயிரத்துக்கான புதிய திட்டப்பணிகளையும் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், சுகவனம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜன், தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி, ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சத்தியவாணி செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரஜினி செல்வம், பூபாலன், .சத்தியவாணிராஜா, தாசில்தார் தெய்வநாயகி, தனி தாசில்தார் சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமரன், சிவப்பிரகாசம், ஒன்றிய பொறியாளர் பூம்பாவை, ஜமுனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story