ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்


ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 18 Nov 2021 10:34 PM IST (Updated: 18 Nov 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்

தர்மபுரி, நவ.19-
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
வேளாண் வளர்ச்சித் திட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடந்தது. தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் திவ்யதர்சினி, செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூடுதல் கலெக்டர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், வேளாண் துறை வளர்ச்சிக்காக புதிதாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் அனைத்து திட்டங்களையும் பயன்களையும் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும். பல்வேறு துறைகளில் திட்டங்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் அளிப்பதே இதன் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் 2,500 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும். தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 56 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
கூட்டத்தில் வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, வேளாண் கருவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி கருவிகள் உள்பட மொத்தம் 912 பேருக்கு ரூ.10.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நீர்பாசனத் திட்டங்கள்
தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் விவசாய மேம்பாட்டிற்கான நீராதாரங்களான ஏரிகள், குளங்கள், தடுப்பணைகளை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசன திட்டங்களும் செயல்படுத்தப்படும். தூள் செட்டி ஏரியை தூர்வாரும் பணி விரைவில் தொடங்கும்.
புளோரைடு பாதிப்பை குறைக்கும் வகையில் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படும். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை நீரேற்று பாசன முறையில் (லிப்ட் இரிகேஷன்) மாவட்டத்திலுள்ள வறண்ட ஏரிகளுக்கு நிரப்ப ஆய்வு நடத்தி அந்த திட்டத்தை முதல்- அமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும்.
பயிர் காப்பீடு
தர்மபுரி மாவட்டத்தில்40 சதவீத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை. எனவே பயிர் காப்பீடு குறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் அங்கு தொழிற்சாலைகள்தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், தர்மபுரி நகர பொறுப்பாளர் அன்பழகன், உதவி கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர்கள் அனிதா, சங்கர், ரகமத்துல்லாகான், ராஜ்குமார், முகுந்தன், உதவி கலெக்டர் முத்தையன், வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், மகளிர் திட்ட இயக்குனர் பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story