தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர் மழை


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர் மழை
x
தினத்தந்தி 18 Nov 2021 10:34 PM IST (Updated: 18 Nov 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர் மழை

தர்மபுரி, நவ.19-
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே வீடுகள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதலே மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று பகல், மதியம், மாலை நேரத்திலும் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று மாலை 6 மணி வரை நிலவரப்படி மாவட்டத்தில் பகுதி வாரியாக பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:-
தர்மபுரி-33, பென்னாகரம்-30, அரூர்-49, பாப்பிரெட்டிப்பட்டி- 49, மாரண்டஅள்ளி- 27, பாலக்கோடு- 65.20, ஒகேனக்கல்- 9.60 மாவட்டம் முழுவதும் மொத்தம் 262.80 மி.மீ.மழை பெய்தது. தொடர்மழை காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து வழக்கத்தைவிடகுறைந்தது.
வீடுகள் இடிந்தன
தொடர் மழை காரணமாக நேற்று காலை காரிமங்கலத்தை அடுத்த நாகணம்பட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டு சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். ஆனால் வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. அனுமந்தபுரம் ஊராட்சி கொண்டசாமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டு சுவர் இடிந்தது. இதேபோன்று கெரகோடஅள்ளி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் பச்சையப்பன், சந்தகவுண்டன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த தங்கம் ஆகியோரது வீடும் இடிந்து விழுந்தன. இந்த வீடுகளில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை, விடாமல் விடிய விடிய பெய்தது.
நேற்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதே நேரத்தில் கல்லூரிகள் இயங்கின. நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் பெய்த கன மழையால் சாலைகள் வெள்ளக்காடானது.
மின்கம்பங்கள் சாய்ந்தன 
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் வீடுகளுக்கு திரும்பினார்கள். பல இடங்களில் கடைகள் கன மழை காரணமாக மூடப்பட்டன. கன மழையால் காவேரிப்பட்டணம் அருகே மலையாண்டஅள்ளி என்னும் இடத்தில் புளிய மரம் சரிந்து சாலையில் விழுந்தது.- இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல வேப்பனப்பள்ளியில் கிருஷ்ணகிரி சாலையில் புளிய மரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம் 3 மின் கம்பங்கள் மழையால் சாய்ந்தன. உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் அங்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதே போல சிங்காரப்பேட்டை அருகே அத்திப்பாடி கிராமத்தில் நேற்று பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பஸ் கவிழ்ந்தது 
அந்த நேரம் ஊத்தங்கரை நீப்பதுரை சென்ற டவுன் பஸ் மழை வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த கன மழையால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
தொடர் மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வரக்கூடிய நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 23 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மத்தூர்
தொடர் மழையால் மத்தூர் ஒன்றியம் மாதம்பதி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 48) சதீஷ் (24) ஆகியோரது ஓட்டு வீடுகளும்,தனபால் (55) சக்கரவர்த்தி (48) ஆகியோரது கூரை வீடுகளும் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்கள் அங்குள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த ஒட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் லெனின் ஆகியோர் வீடு இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் உதவிகளையும் அளித்தனர்.
மேலும் மாதம்பதி கிராமத்தில் லட்சுமி (45) சுகுமார் (45) பூபதி (50) உள்ளிட்டவர்களின் வீடுகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. பின்னர் மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதவிர அங்குள்ள வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த தொடர் மழையால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே வீடுகள் இடிந்து விழுந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story