ஆம்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் மறியல்
ஆம்பூர் அருகே குடுயிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்ததால் 2 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே குடுயிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்ததால் 2 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. வெள்ள நீர் பாலாற்றுக்கு செல்லாமல் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி பாங்கி ஷாப், துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வெள்ளம் புகுவதை தடுக்கக் கோரி நேற்று இரு இடங்களில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அம்பேத்கர் நகர் பகுதிக்கு வந்த உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி பொதுமக்களிடம் சமரசம் பேசி தண்ணீர் பாலாற்றுக்கு செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பூங்காவை அகற்ற எதிர்ப்பு
பின்னர் அருகில் உள்ள தனியார் ஷூ நிறுவனத்தின் சார்பில் சாலையோரத்தில் வைக்கப்பட்ட பூங்காவை அகற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதற்கு ஷூ நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அம்பேத்கர் நகரில் வசிப்பவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீர் செல்ல கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்ததும் வில்வநாதன் எம்.எல்.ஏ. அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கலெக்டர் ஆய்வு
அதேபோல் பங்கி ஷாப் பகுதியில் வெங்கடசமுத்திரம் சாலையில் அப்பகுதியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து சென்ற உமராபாத் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் வெங்கடசமுத்திரம் பகுதியில் 210 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி, 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய ஏரி ஆகிய இரண்டு எரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உள்ளதால் அங்கிருந்து நீரை வெளியேற்ற கால்வாய்களை அகலப்படுத்தி பாலாற்றில் விடும் பணிகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எம்.எல்.ஏ.க்கள் ஆண்பூர் வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story