வெடி வைத்து தகர்க்கப்பட்ட தளவானூர் அணைக்கட்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு


வெடி வைத்து தகர்க்கப்பட்ட தளவானூர் அணைக்கட்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Nov 2021 11:06 PM IST (Updated: 18 Nov 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

வெடி வைத்து தகர்க்கப்பட்ட தளவானூர் அணைக்கட்டு பகுதியில் கலெக்டர் டி மோகன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மண் அரிப்பு ஏற்படாமல் கரைப்பகுதியை பலப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

விழுப்புரம்

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் தளவானூரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைக்கட்டு உடைந்து சேதம் அடைந்த 3 மதகுகளும் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் டி.மோகன், நேற்று தளவானூருக்கு சென்று அணைக்கட்டு இருந்த பகுயில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக அணைக்கட்டு இருந்த பகுதியை சுற்றியுள்ள கரையோர பகுதிகளில் தடுப்புக்கட்டைகள் அமைத்தும், மணல் மூட்டைகளை அடுக்கியும் கரையை சுற்றி அரிப்புகள் ஏற்படாத வண்ணம் பலப்படுத்தும்படி பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் அணைக்கட்டின் கரைப்பகுதிக்கு சென்றிடாத வகையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மழைநீரை வெளியேற்ற உத்தரவு

தொடர்ந்து விழுப்புரம் அருகே பிடாகம்- அத்தியூர்திருவாதி செல்லும் சாலையில் ஆழாங்கால் வாய்க்கால் குறுக்கே அமைந்துள்ள பாலம் சேதமடைந்துள்ளதை பார்வையிட்ட  கலெக்டர் டி.மோகன் மணல் மூட்டைகளை கொண்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதன் பின்னர் விழுப்புரம் பழைய பஸ் நிலையம், எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட அவர், இந்த தண்ணீரை பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றும்படி நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து தேங்கியிருந்த மழைநீரை பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் ராஜேந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story