சினிமா துணை நடிகை திடீர் மாயம்
தேனியில் சினிமா துணை நடிகை திடீரென்று மாயமாகினார். அவரை கூடலூரில் போலீசார் மீட்டனர்.
தேனி:
புதுச்சேரி மாநிலம் பூமியான் பேட்டை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மனைவி பானுப்பிரியா (வயது 36). இவர் சினிமா துணை நடிகையாக உள்ளார். இவர் சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் கார்த்தி, இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இணைந்து நடிக்கும் ‘விருமன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக புதுச்சேரி கம்பன் வீதியை சேர்ந்த சினிமா படப்பிடிப்புக்கு ஆள் சேர்க்கும் ஏஜெண்டு அம்பிகா (34) என்பவர் மூலம் பானுப்பிரியா தேனிக்கு அழைத்து வரப்பட்டார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில காட்சிகள் நடித்தார். பின்னர் அவர் துணை நடிகைகள் சிலருடன் தேனியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் அவருடைய செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது. இதனால், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக அவரும், அம்பிகாவும் சென்றனர். பாதி வழி சென்ற போது அம்பிகாவுடன் கோபித்துக் கொண்டு அவர் அங்கிருந்து மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார் என தெரியாததால், இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அம்பிகா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று காலை வழக்குப்பதிவு செய்து மாயமான பானுப்பிரியாவை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கூடலூரில் இருப்பது தெரியவந்தது. உடனே கூடலூருக்கு போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில். மன உளைச்சல் ஏற்பட்டு கூடலூருக்கு சென்றதாக தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துணை நடிகை மாயமான தகவல் திரைப்படக் குழுவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story