மாவட்டத்தில் கனமழை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின; 2 வீடுகள் இடிந்தன கன்றுக்குட்டி உயிரிழப்பு
மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. 2 காலனி வீடுகள் இடிந்தன. கன்றுக்குட்டி உயிர் இழந்தது.
கறம்பக்குடி:
நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
கறம்பக்குடி பகுதியில் பெய்துவரும் கனமழையால் அக்னி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான பாசன குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இடைவிடாது வெளுத்து வாங்கிய மழையால் மழையூர், தீத்தானிப்பட்டி, செங்கமேடு, மணமடை, ரெகுநாதபுரம், திருமணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வீடுகள் இடிந்தன
கறம்பக்குடி அருகே உள்ள மணமடையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காலனி வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதில் அஞ்சலை, பாஞ்சாலை ஆகிய 2 மூதாட்டிகளின் வீடுகள் நேற்று இடிந்தன. இதனால் அவர்களது குடும்பத்தினர் இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இதேபோல் பிலாவிடுதி செட்டியார் தெருவில் விவசாயி மதி என்பவரின் மாட்டு கொட்டகை சாய்ந்ததில் அவரது பசுங்கன்றுக்குட்டி உயிர் இழந்தது.
பொன்னமராவதி
பொன்னமராவதி பொன்-புதுப்பட்டியில் நாகப்பச்செட்டியார் நினைவு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகே உள்ள மலையான் ஊரணியின் ஒரு பகுதியின் கரை சமீபத்தில் இடிந்து விழுந்தது. இதன் வழியாக பள்ளமான பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகம் முழுவதும் நீர் கசிந்து சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். 445 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் தற்போது 50-க்கும் குறைவான மாணவர்களே வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பள்ளி வளாகம் முழுவதும் தற்காலிகமாக கிரஷர் மண் கொட்டி சரி செய்ய வேண்டும். மேலும் அருகே கரை இடிந்த நிலையில் உள்ள ஊரணி கரையினை மண் மூட்டைகளைக் கொண்டு அடுக்கி பலப்படுத்த வேண்டும் என்று அரசு நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை குமரன் காலனியை சேர்ந்த தையல் அம்மாள் ஓட்டு வீடு சுவர் சரிந்து விழுந்தது. இதேபோல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி வேம்பு என்பவருக்குச் சொந்தமான கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இத்தகவலை அறிந்த கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சுவர் இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்கள்.
Related Tags :
Next Story