பச்சிளங் குழந்தைகளின் நல்வாழ்வில் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது கலெக்டர் ஸ்ரேயா சிங் பேச்சு
பச்சிளங் குழந்தைகளின் நல்வாழ்வில் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது கலெக்டர் ஸ்ரேயா சிங் பேச்சு
நாமக்கல், நவ.19-
பச்சிளங் குழந்தைகளின் நல்வாழ்வில் கிராமப்புற செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடனான பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.
பச்சிளங் குழந்தைகள் வாரவிழா
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி மகப்பேறு சிகிச்சை பெற்ற தாய்மார்களுக்கு தாய்சேய் நல பெட்டகங்களை வழங்கி பேசும்போது கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-வது வாரம் தேசிய பச்சிளங் குழந்தைகள் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பச்சிளங் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் தாய்ப்பால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தொடர்ந்து 6 மாதம் வரை பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்க வேண்டும். அதன் பிறகு குழந்தை பிறந்த 2 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு இணை உணவுகளுடன் தாய்ப்பால் தொடர்ந்து வழங்க வேண்டும். குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் உறுப்புகளின் சீரான வளர்ச்சியில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஸ்கேன் பரிசோதனை
கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பத்தை கிராமப்புற செவிலியர்களிடம் தெரிவித்து பதிவு செய்திட வேண்டும். அதனடிப்படையில் கிராமப்புற செவிலியர்கள் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தல், ஸ்கேன் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி அவர்களது உடல் நலத்தை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்வார்கள்.
மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய கீரை வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்து ஆரோக்கியமான குழந்தை பெற சத்தான உணவு வகைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவார்கள். கர்ப்பிணிகளோடு அவர்களது உறவினர்களும் இந்த ஆலோசனைகளை கேட்டறிந்து பின்பற்ற வேண்டும். பச்சிளங் குழந்தைகளின் நல்வாழ்வில் கிராமப்புற செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடனான பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மகப்பேறு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய குழந்தை மற்றும் தாயை வீட்டில் உள்ளவர்களும், உறவினர்களும் தன் மகள் போலவும், தன் உடன் பிறந்த சகோதரி போலவும் நன்கு கவனித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் ஆலோசனைகளை பின்பற்றி வருங்கால இளைய சமுதாயத்தை ஆரோக்கியமாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தாய்ப்பால்
முன்னதாக பச்சிளங் குழந்தைகளின் வளர்ப்பு, தாய்ப்பால் வழங்கும் போது பின்பற்ற வேண்டியவைகள் மற்றும் கண்காணிப்பு முறை குறித்து நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவமனை கண்காணிப்பாளர் குணசேகரன், குழந்தைகள் நல மருத்துவர்கள் கண்ணன், கார்த்திகேயனி, மகப்பேறு மருத்துவர் மிதுனா, பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர் ரேவதி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் கண்ணப்பன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) பரிமளாதேவி, குழந்தைகள் நல பேராசிரியர் சுரேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story