குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் 9,000 கனஅடி நீர் செல்கிறது
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 9 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது.
குடியாத்தம்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 9 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது.
வெள்ளப்பெருக்கு
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மோர்தானா அணையில் அதிகளவு தண்ணீர் வழிந்து ஓடுகிறது. நேற்று மாலை நிலவரப்படி மோர்தானா அணையில் இருந்து சுமார் 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வினாடிக்கு வெளியேறிக் கொண்டிருக்கிறது மேலும் ஆர்.கொல்லப்பல்லி ஆற்றில் சுமார் 1,500 கன அடி தண்ணீரும், சிறுசிறு கானாற்றின் மூலம் ஆயிரம் கனஅடி தண்ணீர் என மொத்தம் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் செல்கிறது
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரம் உள்ள நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு, என்.எஸ்.கே.நகர், கோபாலபுரம், செக்குமேடு, காமராஜர்பாலம், சுண்ணாம்பு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையோரம் வசித்துவந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள்
இவர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் குபேந்திரன் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ் மேற்பார்வையில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் கவுண்டன்மகாநதி ஆற்றின் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமன்படுத்தும் பணி
கெங்கையம்மன் கோவில் ஆற்று தரைப்பாலம் அருகே ஒரு பகுதியில் கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டி மணல்மேடு ஆகிவிட்டதால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் செல்வதில்லை. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆறு குறுகி செல்வதால் அதிக அளவு வெள்ளம் செல்கிறது.
இதனைத்தொடர்ந்து தி.மு.க. நகர பொறுப்பாளர் சவுந்தரராஜன் ஏற்பாட்டில் 4 பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் மேடுகளை அகற்றும் பணியில் நடைபெற்றது. இதனால் அதிகளவு வெள்ளம் சென்றாலும் இரண்டு பக்க கரைகளை ஒட்டியபடி தண்ணீர் சென்றதால் வெள்ளத்தின் சீற்றம் குறைந்து காணப்பட்டது.
கொல்லப்பல்லி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் அருகே மொகிலி, தேக்குமந்ைத, பண்டலதொட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உருவாகும் காட்டாறு சைனகுண்டா, மேல்கொல்லப்பல்லி, மோடிகுப்பம் வழியாக குடியாத்தம்-பலமநேர் சாலையில் ஆர்.கொல்லப்பல்லி அருகே சாலையை கடந்து ஆற்றில் செல்லும் வெள்ளம் சேங்குன்றம், சூராளூர், சீவூர் வழியாக குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் செல்லும் கவுண்டன்யமகாநதி ஆற்றில் கலக்கிறது.
இதனால் ஆர்.கொல்லப்பல்லி ஆற்றில் 1,500 கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் செல்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆர்.கொல்லப்பல்லி வழியாக வாகனங்கள் செல்ல காவல்துறையினர் தடை விதித்தனர்.
Related Tags :
Next Story