தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 19 Nov 2021 12:27 AM IST (Updated: 19 Nov 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே  அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் 5 மாதங்களாக மின் சாதனம் பழுதடைந்து மின்சாரம் இல்லாமல் செயல்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த  நாட்டார்மங்கலம் நம்மால் முடியும் நண்பர்கள்  குழுவினர்  சீரமைத்து கொடுத்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நம்மால் முடியும் குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், நாட்டார்மங்கலம், பெரம்பலூர்.

கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை  ஆதனூர்  கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவற்றிற்கு மருத்துவம் பார்க்க இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பச்சமுத்து, ஆதனூர், பெரம்பலூர். 

பாதுகாப்பற்ற முறையில் செயல்படும்  அலுவலகம் 
அரியலூர் கோட்டம் அரியலூர் மாவட்ட தலைமையிடத்தில் செயல்படும் துணை மின்நிலையம் வளாகத்தில் உள்ள வாரிய குடியிருப்புகளில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், கிராமியம் பிரிவு அலுவலகத்தில் 15 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குடியிருக்க பயன்படுத்த முடியாத குடியிருப்பில் அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுகிறது. தற்போது  மழைநீர் அலுவலகத்தில் புகுந்து (ஒழுகி) பாதுகாப்பு இல்லாமல்  உள்ளது. கழிவறை இல்லை. சிறுநீர் திறந்தவெளியில் கழிக்கும் நிலைதான் உள்ளது. 15க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அலுவலகத்தில் கழிவறை இல்லாததால் ஊழியர்களின் உடல்நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.  

வடிகால், சாலை வசதி வேண்டும் 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,‌  நற்குணம் பசும்பலூர் செல்லும் வழியில் உள்ள காலனி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக முறையான வடிகால் வசதியோ, சிமெண்டு சாலையோ அமைக்கப்படவில்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நற்குணம், பெரம்பலூர். 
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,  தேவையூர் ஊராட்சிக்குட்பட்ட மங்களமேடு கிராமத்தில் 3வது வார்டில் டி.இ.எல்.சி.  தொடக்க பள்ளிக்கு எதிர்ப்புறம் இருக்கக்கூடிய வீதியில் முறையான வடிகால் வசதி இன்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 மணிகண்டன், மங்களமேடு, பெரம்பலூர். 

குரங்குகள் தொல்லை அதிகம் 
அரியலூர் மாவட்டம், கீழப்பலூர் ஊராட்சியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக ஸ்ரீனிவாச நகரில் அதிகளவில் அட்டகாசம் செய்வதுடன் ஒரு சிறுவனையும் கடித்து விட்டது. மேலும் இவை வீட்டில் வைக்கப்படும் மளிகை பொருட்கள்  மற்றும் தின்பண்டங்களை எடுத்துச்சென்றுவிடுகின்றன. இது குறித்து புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கணேஷ்மூர்த்தி, கீழப்பலூர், அரியலூர். 

பருத்தி வயலில் தேங்கிய மழைநீர் 
பெரம்பலூர் மாவட்டம் அ.குடிக்காடு கிராமத்தில் பெய்த கனமழையால் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி பருத்தி வயலில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பருத்தி செடிகள் அழுகும் நிலையில் உள்ளன. எனவே இதனை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விவசாயிகள், அ.குடிக்காடு, பெரம்பலூர். 

அம்மா உணவகம் தேவை
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் ஏராளமான கூலித்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று  மற்றும் பருவ மழை காரணமாக இப்பகுதி கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வேலையின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் அம்மா உணவகம் அமைத்தால் பெரிதும் உதவியாக இருக்கும்.  இதனை கருத்திற்கொண்டு இப்பகுதியில் அம்மா உணவகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை, அரியலூர்.

குரங்குகளால் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா, முள்ளூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் ஏழை எளிய மக்களின் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் வைத்திருக்கும் உணவு பொருட்களையும் தின்று விடுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் முட்டைகளை குழந்தைகள் வாங்கிச் செல்லும்போது  பறித்துச் சென்று விடுகிறது. குழந்தைகளை மிரட்டியும் கடிக்கவும் பாய்கிறது. ஓட்டு வீட்டில் உள்ள ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் புகுந்து அங்கிருக்கிற பொருட்களையும்  தின்று விடுகிறது. மேலும்  கடைகளில் புகுந்து கடைகளில் இருக்கும் பொருட்களையும் நாசம் செய்து விடுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுரேஷ் , முள்ளூர், புதுக்கோட்டை. 

பஸ் வசதி வேண்டும் 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தேராவூர் ஊராட்சியில்  பல ஆண்டுகளாக பஸ் வசதி  இல்லை. இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சிவா, தேராவூர், புதுக்கோட்டை. 

மண்ணை கொட்டி அடைக்கப்பட்டுள்ள வாய்க்கால் 
திருச்சி மாவட்டம், ஆலத்தூர் ஆனந்தம் நகர் தெற்கு விஸ்தரிப்பில்  உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்  மற்றும் மழைநீர் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் வழியாகத்தான் மழைநீர் சென்றது. இந்த நிலையில் இந்த வாய்க்கால் மண்ணை கொட்டி அடைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்லவும், மழைநீர் செல்லவும் வழியின்றி மழைபெய்யும்போது அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் வீதிகளில் மற்றும் காலி மனைகளில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஆலத்தூர் ஆனந்தம் நகர்,  திருச்சி.

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் 
திருச்சி மாநகராட்சி, பொன்மலைகோட்டம் 43-வது வார்டு  காஜாநகர் பகுதியில் கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபம், மசூதி ஆகியவை உள்ளதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் கூடும் பகுதியாகும். இப்பகுதியில் காஜாநகர் மற்றும் கல்வி வளாகங்களை சுற்றி மழைநீர் வெளியேற்றப்படாமல் குளம்போல் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள நீரில், கழிவுநீரும் சில நாட்களாக சேர்ந்துள்ளது. இதனால்  கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காஜாநகர், திருச்சி. 

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், மணமேடு, 1-வது  வார்டு மாந்தோப்பு தெருவில் உள்ள  2-வது மின்கம்பம் பழுதடைந்து உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மணமேடு, திருச்சி. 

சேறும், சகதியுமான சாலைகள் 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஆவூர் ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் ஊற்று போல் ஊற்றெடுத்து சேறும், சகதியுமாய் நடக்கவே முடியாத சூழ்நிலையில் உள்ளது. மேலும்  பெரியவர்கள், தாய்மார்கள் இரவு நேரங்களில் வீதியில் தடுமாறி  விழுந்து விடுகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
இன்னாசிமுத்து, ஆவூர், புதுக்கோட்டை. 
இதேபோல் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர் கிராமம் (தெற்கு) பஞ்சாயத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் (சுப்பன் ஆசாரி களம்) பகுதியில் சாலை அமைக்கப்படாததால் மழை காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.  இதனால் இந்த வழியாக செல்லும் குழந்தைகள், முதியோர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நவநீதகிருஷ்ணன், கழுகூர், கரூர். 
திருச்சி மாவட்டம், ஏளூர்பட்டி பஸ் நிலையத்தில் சாலை குண்டும், குழியுமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் மோட்டார் சைக்கிளை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  ஏளூர்பட்டி, திருச்சி. 
இதேபோல் திருச்சி மாநகராட்சி, குழுமணி ரோடு, ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக, சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் இப்பகுதியில் தெரு விளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் பலர் சேற்றில் வழுக்கி விழுகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஸ்டேட் பேங்க் காலனி, திருச்சி. 

கழிவுநீர் வாய்க்காலான பாசன வாய்க்கால் 
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தாலுகா, கிளியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகே செல்லும் பாசன வாய்க்கால்கள் தற்போது கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது. அதில் டெங்கு கொசுக்கள், நோய் தொற்று பரப்பும் புழுக்கள் உள்ளிட்டவை உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை விளைவிக்கின்றன. இதனை சீரமைத்து தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கிளியநல்லூர், திருச்சி. 

பாதாள சாக்கடையில் அடைப்பு 
திருச்சி மாநகராட்சி, பொன்மலை கோட்டம், 34-வது வார்டுக்கு உட்பட்ட ஜெய்லானியா மெயின் தெரு மற்றும் 4-வது தெருவில் பாதாள சாக்கடை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அடைப்பு ஏற்பட்டு அதன் கழிவுகள் வெளியேறி பொதுமக்களின் வீடுகளின் முன்பாக தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரப்பும் இடமாகவும் உருவாகி உள்ளது. பாதாள சாக்கடையின்  மூடியும் ஆபத்தான நிலையில் உள்ளது. நோய் பரப்பும் பாதாள சாக்கடை அடைப்பையும், ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் மூடியையும் உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஜெய்லானியா தெரு, திருச்சி.

கோழிகளை கடித்துக்குதறும் நாய்கள் 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் கரட்டாம்பட்டி பஞ்சாயத்தில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கின்றன. இவை அப்பகுதியில் வளர்க்கப்படும் கோழிகளை கடித்து குதறுகின்றன. இதனால் மொத்தம் 80 கோழிகள் உயிரிழந்துள்ளன. மேலும் இந்த தெருநாய்கள் வெறிபிடித்தவாறு பொதுமக்களை கடிக்க வருவதினால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பூபாலன், கரட்டாம்பட்டி, திருச்சி. 


Next Story