ஆனைக்குட்டம் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர்
ஆனைக்குட்டம் அணையில் ஏற்பட்ட ஷட்டர் பழுது காரணமாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதை தொடர்ந்து சீனிவாசன் எம்.எல்.ஏ. நேரில் வந்து ஆய்வு செய்தார்.
சிவகாசி,
ஆனைக்குட்டம் அணையில் ஏற்பட்ட ஷட்டர் பழுது காரணமாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதை தொடர்ந்து சீனிவாசன் எம்.எல்.ஏ. நேரில் வந்து ஆய்வு செய்தார்.
ஆனைக்குட்டம் அணை
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ஆனைக்குட்டம் அணை உள்ளது. இந்த அணை கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அணையின் முழு கொள்ளளவுக்கு இதுவரை தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் அணையில் உள்ள ஷட்டர் பழுது தான்.
இதை சுட்டிக்காட்டி அணையில் உள்ள ஷட்டர் உடனே சரி செய்ய வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியிடப் பட்டது. இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆனைக்குட்டம் அணைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். ஷட்டரை பழுது செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க கலெக்டர் மேகநாதரெட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தண்ணீர் வரத்து
இந்தநிலையில் நேற்று முன்தினம் வத்திராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதை தொடர்ந்து ஆனைக்குட்டம் அணைக்கு தண்ணீர் வர தொடங்கியது. ஆனால் இந்த தண்ணீர் அணையின் ஷட்டர் பழுது காரணமாக உடனே அணையில் இருந்து வெளியேறியது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் விருதுநகரில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சுக்கிரவார்பட்டி பகுதி விவசாயிகள் அணைக்கு வந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
விருதுநகர்
ஆனைக்குட்டம் அணை பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து விருதுநகர் நகராட்சிக்கும், சிவகாசி மாநகராட்சியின் ஒரு பகுதியான திருத்தங்கலில் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் வருகிற கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அதற்கு உடனே ஷட்டரை தற்காலிகாக சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் ஷட்டர் பழுது காரணமாக தண்ணீர் வெளியேறுகிறது என்ற தகவல் கிடைத்த விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் ஆனைக்குட்டம் அணைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story