மலைச்சாலையில் நிலச்சரிவு
கீரிப்பாறை அருகே மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தனியார் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்,
கீரிப்பாறை அருகே மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தனியார் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.
மலைச்சாலை
கீரிப்பாறை அருகே உள்ள பால்குளத்தில் இருந்து கரும்பாறைக்கு செல்லும் மலைச்சாலை உள்ளது. இந்த சாலைப் பகுதியில் ஏராளமான தனியார் தோட்டங்கள், எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு கிராம்பு, ரப்பர், நல்லமிளகு போன்றவை பயிர் செய்யப்படுகிறது. அங்குள்ள எஸ்டேட்டுகள், தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை பயன்படுத்தி சென்று வந்தனர். சிலர் குடும்பத்துடன் அங்கு தங்கியும் வேலை பார்த்து வந்தனர்.
மேலும், கிராம்பு அறுவடை காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கிராம்பு பறிப்பதற்கு செல்வது வழக்கம்.
நிலச்சரிவு
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக மலையோர பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக இஞ்சிகடவு விலக்கு பகுதியில் இருந்து கரும்பாறைக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மேலும், அந்த பகுதி சாலையில் பாறைகள் உருண்டு விழுந்து கிடந்தன. இதேபோல், மாட்டுப்பட்டியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் சாலையின் மேல் ஒரு பாறை தொங்கிய நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் பாறை சாலையில் விழுந்து பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இதனால், அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
போர்க்கால அடிப்படையில்...
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் அழகியபாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறன், வனவர் பிரதீப் ஆகியோர் நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது, மாவட்ட வன அலுவலர் கூறுகையில், சேதமடைந்த பகுதியில் விரைவில் தற்காலிக பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போர்க்கால அடிப்படையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சாலையை சரி செய்யப்படும். பாறைகளும் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story