நெல்லை-தென்காசியில் பலத்த மழை: தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு


நெல்லை-தென்காசியில் பலத்த மழை: தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 2:36 AM IST (Updated: 19 Nov 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் பெய்த பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நெல்லை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. 
நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பாளையங்கோட்டை தற்காலிக பஸ் நிலையம், சேவியர் காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது.

பாளையங்கோட்டை இலந்தைகுளம், போஸ்ட் ஆபீஸ் தெரு, மாசிலாமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒருசில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின்தடையும் ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மரக்கிளைகளை அகற்றி உடனடியாக மின்வினியோகத்தை சரிசெய்தனர். பல்வேறு இடங்களில் காம்பவுண்டு சுவர்களும் இடிந்து விழுந்தது.

இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. மழை குறைந்ததும் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் நேரடி பார்வையில் ஊழியர்கள் களம் இறக்கப்பட்டனர்.
பொக்லைன் எந்திரத்துடன் தண்ணீரை வடியவைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். விடிய, விடிய இந்த பணி நடைபெற்றது.

முதற்கட்டமாக தற்காலிக பஸ் நிலையத்தில் தேங்கி கிடந்த தண்ணீர் வடிய வைக்கப்பட்டது. அருகில் உள்ள வேய்ந்தான் குளத்துக்கு தண்ணீர் செல்லும் பாதை அடைக்கப்பட்டிருந்ததால் பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கியது தெரியவந்தது. 

இதையடுத்து அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து தண்ணீரை வடியவைத்தனர். நேற்று முதல் பஸ் நிலையத்தில் வழக்கம் போல் போக்குவரத்து நடைபெற்றது. இதேபோல் சேவியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில தெருக்களில் தேங்கி இருந்த தண்ணீரை நேற்று காலை வடிய வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நெல்லையில் நேற்று மழை இல்லை. பகலில் வானம் மேகமூட்டமாகவும், அவ்வப்போது வெயிலும் அடித்தது.

மேலும், பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1,834 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதுதவிர காட்டாற்று வெள்ளம் 4 ஆயிரம் கனஅடி என தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.

மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை, ராமநதி அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரும், பல்வேறு பகுதிகளில் பெய்த மழை தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருவதால் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவில் மேல்மண்டபத்தை முழ்கடிக்கும் வகையில் வெள்ளம் சென்றது. 

இதனால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லை மேலநத்தம்-கருப்பந்துறை தரைமட்ட பாலத்தில் நின்று போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஆற்றில் யாரும் குளிக்க செல்ல கூடாது என்று எச்சரித்து வருகிறார்கள்.

குறுக்குத்துறை படித்துறை பகுதிக்கு பொது மக்கள் செல்லாத வகையில் இரும்பு தடுப்பு கொண்டு மூடப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் அங்கேயே முகாமிட்டு ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -6, சேர்வலாறு -3, மணிமுத்தாறு -19, நம்பியாறு -94, கொடுமுடியாறு -40, அம்பை -65, சேரன்மாதேவி -62, நாங்குநேரி -60, ராதாபுரம் -29, களக்காடு -65, மூைலக்கரைப்பட்டி -20, பாளையங்கோட்டை -85 நெல்லை -42, கடனாநதி அணை -11, ராமநதி -8, கருப்பாநதி -24, குண்டாறு -5, அடவிநயினார் -20, ஆய்க்குடி -14, செங்கோட்டை -1, தென்காசி -7, சங்கரன்கோவில் -109, சிவகிரி -53.

Next Story