ஏரி நிரம்பி ஊருக்குள் புகுந்த வெள்ளம்


ஏரி நிரம்பி ஊருக்குள் புகுந்த வெள்ளம்
x
தினத்தந்தி 19 Nov 2021 2:40 AM IST (Updated: 19 Nov 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் தேத்தாம்பாக்கம் ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

திருக்கனூர், நவ.19-
திருக்கனூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் தேத்தாம்பாக்கம் ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. 
ஏரி நிரம்பியது
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருக்கனூர் பகுதியில் நேற்று முன்தினம் முதல் அடைமழை பெய்து வருகிறது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் திருக்கனூர் அருகே உள்ள தேத்தாம்பாக்கம் ஏரி நிரம்பி வழிகிறது. இதன் உபரிநீர் தேத்தாம்பாக்கம் கிராமத்திற்குள் புகுந்தது. 
இதன் காரணமாக தேத்தாம்பாக்கம் காலனி மாரியம்மன் கோவில் வீதி, நடுத்தெரு, அம்பேத்கர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
50 வீடுகளில் மழைநீர்...
இதேபோல் திருக்கனூர் காந்திநகர், கூனிச்சம்பட்டு காமராஜர் நகர், பெரமனார் கோவில் வீதி, கே.ஆர். பாளையம் கிழக்கு வீதி, சுத்துக்கேணி மேட்டுத்தெரு, செட்டிப்பட்டு மேட்டு தெரு மற்றும் செட்டிப்பட்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. செட்டிப்பட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த சத்யா என்பவரின் குடிசை வீடு மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது.
மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story