சேதமடைந்த பாலத்தில் அமர்ந்து பொதுமக்கள் திடீர் போராட்டம்
பாளையங்கோட்டையில் சேதமடைந்த பாலத்தை உடனே சீரமைக்க கோரி பொதுமக்கள் அந்த பாலத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நெல்லை பகுதி முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி ஆவின் பாலகத்தில் இருந்து ஐசக் நகர் வைகறை தென்றல் நகர் செல்லும் வழியில் குளம் உள்ளது. பலத்த மழையின் காரணமாக குளத்தின் கரையில் லேசான அரிப்பு ஏற்பட்டு, அந்த பகுதியில் இருந்த சிறிய பாலம் லேசாக சேதமடைந்தது. மேலும் பாலத்தை ஒட்டி அமைந்துள்ள சாலையும் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது.
இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை அந்த பாலத்தின் மீது அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாலத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாலம் மற்றும் குளத்தின் கரையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story