சேலத்தில் தொடர் மழை-பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


சேலத்தில் தொடர் மழை-பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 2:49 AM IST (Updated: 19 Nov 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சேலம்:
சேலத்தில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
அதேநேரத்தில் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய, விடிய பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. புறநகரான ஆத்தூர், வீரகனூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது.
பொதுமக்கள் அவதி
சேலம் மாநகரில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. எப்போது மழை நிற்கும் வெளியில் செல்லலாம் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
காய்கறி சந்தை மற்றும் மளிகை கடைகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மழையில் நனைந்தவாறு தங்களது அலுவலகங்களுக்கு சென்றதை காணமுடிந்தது. ஒருசிலர் குடைகளை பிடித்தவாறு சாலையில் நடந்து சென்றனர். 
நேற்று சேலம் நகரில் மேகமூட்டத்துடன்  தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் நாள் முழுவதும் மக்கள் சூரியனை பார்க்க முடியவில்லை.  இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அதேநேரத்தில் பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் முடங்கினர். காலை முதல் இரவு வரையிலும் விட்டு, விட்டு மழைபெய்தபடி இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
தொடர் மழையால் கிச்சிப்பாளையம், நாராயண நகர், பள்ளப்பட்டி, களரம்பட்டி, பெரமனூர், அழகாபுரம், பெரியபுதூர், தாதகாப்பட்டி, சங்கர் நகர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், சாலைகளிலும் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவித்திருந்தார். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில் வழக்கம்போல் கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்ததால் கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு தங்களது கல்லூரிகளுக்கு சென்றனர். ஆனால் குறைவான மாணவ, மாணவிகளே கல்லூரிகளுக்கு வந்திருந்தனர். 
இதனிடையே மழை தொடர்ந்து நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மழையளவு
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பெத்தநாயக்கன்பாளையம்-56, ஆத்தூர்-48, தம்மம்பட்டி-42, கெங்கவல்லி-40, வீரகனூர்-25, ஆனைமடுவு-19, ஏற்காடு-14.8, கரியக்கோவில்-8, சேலம்-7.6, காடையாம்பட்டி-6, ஓமலூர்-3, எடப்பாடி-2.2, மேட்டூர்-1.4.

Next Story