‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறி கழிவு பொருட்கள் தினசரி சுத்தம் செய்யப்படாததால் அந்த பகுதி முழுவதும் காய்கறி கழிவுகளாக காட்சி அளிக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சந்தையில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளை அகற்ற வேண்டும்.
-ஊர்மக்கள், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.
===
பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி
சேலம் பட்டை கோவில் அருகில் சாக்கடை கால்வாய் அமைக்க பணி தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பல மாதங்களாக இப்படியே கிடக்கின்றன. மழைக்காலம் என்பதால் சாக்கடை நீருடன் மழைநீரும் கலந்து முழுமையாக பாதை தெரியாமல் போய்விடுகிறது. எனவே ஆபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் பணியை முடிக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பட்டை கோவில், சேலம்.
===
அடிப்படை வசதிகள் இல்லை
தர்மபுரி மாவட்டம் 27-வது வார்டு காந்திநகர் 4-வது கடைசி தெருவில் எந்த வித அடிப்படை வசதியும் இல்லை. இந்த தெருவில் ரோடு குண்டு, குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் தெருவில் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
-ஆர்.மாது, தர்மபுரி.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வடுகம் கிராமம் ஆதிதிராவிடர் தெரு 3-வது வார்டில் 500 குடும்பங்கள் உள்ளன. சாலை, சாக்கடை கால்வாய், குடிநீர், கழிப்பிட வசதி என இங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இதுவரை செய்து தரப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி ஏற்கனவே பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், வடுகம், நாமக்கல்.
====
சாலை பெயரில் முரண்பாடு
சேலம் மாநகராட்சி கலெக்டர் அலுவலகம் அருகில் சாலையை குறிப்பிடும் அறிவிப்பு பலகையில் தமிழில் செர்ரி தெரு என்றும், ஆங்கிலத்தில் செர்ரி ரோடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை பெயரில் உள்ள முரண்பாட்டை மாற்றி அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.
===
ஆபத்தான நிலையில் கட்டிடம்
சேலம் மேற்கு கோட்டம் கருப்பூர் பிரிவு அலுவலகம் தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகத்தில் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கட்டிடத்தின் மேல்தளம் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் அதன் வழியாக மழைநீர் ஒழுகுகிறது. இதனால் எந்த நேரத்திலும் கட்டிடத்தின் மேல் தளம் முழுவதும் இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் பெரிய ஆபத்து ஏற்படும் முன்பு அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கருப்பூர், சேலம்.
===
நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்
ஓமலூரில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ்கள், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல், 100 மீட்டர் தொலைவில் நின்று செல்வதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், முதியவர்கள் ஓடி வந்து பஸ் ஏற வேண்டிய உள்ளது. சிலர் பஸ்சை பிடிக்க முடியாமல் கீழே விழுந்து அடிபடுகின்றனர். இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பிரச்சினையை தீர்க்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயந்தி, சேலம்.
===
சேறும், சகதியுமான சாலை
தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பஞ்சாயத்து மேல் மட்டுகரனூர் ஊரில் மண் சாலை என்பதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை பெய்வதால் சாலை சேறும், சகதியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாக்கடை நீருடன், மழைநீர் கலந்து தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் கவனம் செலுத்தி அதனை சரி செய்ய வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், மேல்மட்டுகரனூர், தர்மபுரி.
சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரி பாலம் அண்ணாநகர் பகுதியில் தற்போது மழைக்காலம் என்பதால் மண் சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது. தண்ணீர் தேங்கி இருப்பதால் டெங்கு பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரா.ஜெகநாதன், காவேரி பாலம், சேலம்.
சேலம் மாவட்டம், அல்லிக்குட்டை நகரம் பாரதியார் தெரு மற்றும் முனியப்பன் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் பல ஆண்டுகளாக தார்சாலை வசதி இல்லை. சாலை மிகவும் மேடு பள்ளமாகவும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்கியும் நிற்கிறது. அதோடு சாக்கடை கால்வாய் வசதியும் இல்லாததால் தெருவில் சாக்கடை நீரும் தேங்கி இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், அல்லிக்குட்டை, சேலம்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, பொட்டியபுரம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உள்ள தெரு சாலை கடந்த 20 ஆண்டுகளாக சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், பொட்டியபுரம், சேலம்.
===
Related Tags :
Next Story