கல்லூரி மாணவியை கொன்று, வாலிபர் தற்கொலை
பெங்களூரு அருகே கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, வாலிபர் தற்கொலை செய்து கொண்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு அருகே கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, வாலிபர் தற்கொலை செய்து கொண்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
மாணவி குத்திக்கொலை
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நிசர்கா லே-அவுட் பகுதியில் வசித்து வரும் தம்பதியின் மகள் சிஞ்சனா. இவர் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று காலையில் சிஞ்சனாவின் தந்தை வெளியே புறப்பட்டு சென்றிருந்தார்.
அவரது தாயும் வெளியே சென்றிருந்தார். அப்போது சிஞ்சனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் ராமநகர் மாவட்டத் தைச் சேர்ந்த கிஷோர் என்ற வாலிபர் சிஞ்சனாவின் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது சிஞ்சனா, கிஷோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென்று ஆத்திரமடைந்த கிஷோர் அங்கு கிடந்த கத்தியை எடுத்து சிஞ்சனாவை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அடைந்த சிஞ்சனா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலிபர் தற்கொலை
பின்னர் கிஷோரும் கத்தியால் தன்னை தானே குத்தி கொண்டதுடன், மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த சிஞ்சனாவின் தாய் வீட்டிற்கு திரும்பிய போது தனது மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், கிஷோர் தூக்கில் தொங்குவதை கண்டும் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் ஜிகனி போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடலையும் கைப்பற்றி விசாரித்தனர்.
காதல் விவகாரத்தில் மாணவி சிஞ்சனாவை கொலை செய்துவிட்டு, கிஷோர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் சிஞ்சனா, கிஷோர் ஆகியோரின் சொந்த ஊர் ராமநகர் மாவட்டம் ஆகும். இதுகுறித்து ஜிகனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஜிகனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story