கருவேல மரங்களின் பிடியில் சிக்கி விழி பிதுங்கும் வைகை ஆறு
கருவேல மரங்களின் பிடியில் சிக்கி விழி பிதுங்கும் வைகை ஆறு
மதுரை
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகையாறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் வரை செல்கிறது. 5 மாவட்டங்களின் குடிநீர் தேவை, மற்ற தேவைகளுக்கு வைகை ஆறே நீராதாரமாக இருந்து வருகிறது. பருவமழை மற்றும் அவ்வப்போது வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதுவும் குறிப்பிட சில மாதங்களில் தான் தண்ணீர் அதிக அளவில் ஓடும். மற்ற மாதங்களில் வறண்டு காணப்படும். குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் மழை பொய்த்து விடும் நேரங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் இருக்காது.
மதுரையை வந்தடையும் வைகை ஆறானது ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது. கருவேல மரங்கள், நாணல் புல், செடி, கொடிகள் என மதுரையை வந்தடையும் வைகை ஆற்றை இவைகளே வரவேற்கின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றாமல் இருக்கின்றனர். இதனால், இந்த தண்ணீர் ராமநாதபுரத்தில் உள்ள விவசாயிகளுக்கு சரிவர சென்று சேர்வதில்லை.
ஆற்றை சூழ்ந்த கருவேல மரங்கள்
தற்போது வடக்கிழக்கு பருவமழையின் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வைகை ஆணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அதிக அளவு தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது. இது காண்போரை மகிழ்ச்சி அடைய செய்தாலும், அந்த மழைநீரை நாம் சேமிக்க தவறிவிட்டமோ என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருக்கிறது.
இயற்கை கொடையான மழை நீரை நாம் சேமிக்க தவறிவிட்டோம் என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல், குடிநீருக்கு மிக மூலதானமாக இருக்கும் வைகை ஆற்றையும் பராமரிக்க தவறி விட்டோம் என்பதும் உண்மை. அதனால் தான் வைகை ஆறானது கருவேல மரங்களால் சூழ்ந்துள்ளன. வைகை ஆற்றின் மேல் அமைந்துள்ள பாலங்களின் மீது ஏறி பார்த்தாலும் கருவேல மரங்களே அதிக அளவில் தெரிகிறது. ஒரு சில இடங்களில் ஆறு செல்வது தெரியாமல், கருவேல மரங்களே முழுமையாக தெரிகிறது. அந்த அளவிற்கு கருவேல மரங்கள் வைகை ஆற்றை சூழ்ந்திருக்கிறது. குறிப்பாக சோழவந்தான் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வைகை ஆறே தெரியாத அளவிற்கு கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே குடிநீரின் அவசியத்தை அறிந்து வைகை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story