கர்நாடகம் முழுவதும் கனமழை; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை


கர்நாடகம் முழுவதும் கனமழை; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 19 Nov 2021 3:03 AM IST (Updated: 19 Nov 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் முழுவதும் 4 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதற்கிடையே பெங்களூரு, கோலார் உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் முழுவதும் 4 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதற்கிடையே பெங்களூரு, கோலார் உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாள் முழுவதும் கனமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன்காரணமாக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அத்துடன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்துள்ளது. அது இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சென்னை அருகே கரையை கடக்க உள்ளது.

 இதையொட்டி சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக கர்நாடகத்திலும் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் நேற்று காலையில் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அந்த சாரல் மழை பெய்தபடியே இருந்தது. அது மதியம் 1 மணிக்கு மேல் தீவிரம் அடைந்து மழைத்துளிகள் சற்று கனமாக விழுந்தது. நேரம் ஆக ஆக மழையின் தீவிரமும் சற்று அதிகரித்தது. இதனால் பெங்களூரு நகரில் நாள் முழுவதும் கனமழை கொட்டியது. இந்த தொடர் மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் குளம் போல் தேங்கி நின்றது.

போக்குவரத்து நெரிசல்

ராஜாஜிநகர், மெஜஸ்டிக், சாந்திநகர், மைசூரு ரோடு, ஜே.சி.ரோடு, அரண்மனை மைதான ரோடு, லால்பாக், ஜெயநகர், பேகூர், பொம்மனஹள்ளி, சில்க் போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி உள்பட நகரம் முழுவதும் மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. இந்த மழை காரணமாக நகரின் முக்கியமான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது.
மெஜஸ்டிக்கை சுற்றியுள்ள சாலைகள், அரண்மனை மைதான ரோடு, மைசூரு ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

 இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது.
தொடர் மழை காரணமாக பெங்களூரு நகர மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ள சிக்பேட்டையில் வியாபாரம் கடுைமயாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று 14 மில்லி மீட்டரும், சர்வதேச விமான நிலைய பகுதியில் 20 மில்லி மீட்டரும், எச்.ஏ.எல். விமான நிலைய பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பெய்தது. 

காவிரி ஆற்றில் வெள்ளம்

பெங்களூரு மட்டுமின்றி பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, ராமநகர், மண்டியா, மைசூரு, சிக்கமகளூரு, உடுப்பி, பெலகாவி, யாதகிரி, ராய்ச்சூர், சாம்ராஜ்நகர், குடகு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது. காலை முதல் இரவு வரை கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்ததால் பல கிராமங்களை வெள்ள சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  

மைசூருவில் இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாமுண்டி மலையில் 6-வது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.குடகில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

குடகு, மைசூரு, மண்டியாவில் பெய்யும் தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

‘ரெட் அலர்ட்’

பெங்களூரு மற்றும் தென்கர்நாடக பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Next Story