பெங்களூருவில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது


பெங்களூருவில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது
x
தினத்தந்தி 19 Nov 2021 3:09 AM IST (Updated: 19 Nov 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர், பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை சேர்த்துவிட்டது தெரியவந்துள்ளது. அவரை டெல்லிக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:பெங்களூருவில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர், பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை சேர்த்துவிட்டது தெரியவந்துள்ளது. அவரை டெல்லிக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் பதுங்கல்

பெங்களூருவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அடிக்கடி மத்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுப்பது உண்டு. அதே நேரத்தில் பெங்களூருவில் பதுங்கி இருக்கும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் பெங்களூருவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளான இர்பான் நாசிர், முகமது சகீப், முகமது தவுகீர் உள்ளிட்டவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதி பதுங்கி இருப்பதுடன், பயங்கரவாதி அமைப்புகளுக்கு இளைஞர்களை சேர்த்துவிடும் வேலையில் ஈடுபடுவது பற்றியும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் முகாமிட்டு பயங்கரவாதியை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

பயங்கரவாதி கைது

இந்த நிலையில், பெங்களூருவில் பதுங்கி இருந்த ஒருவரை நேற்று முன்தினம் மாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ஜூகாப் ஹமீத் சகீல் முன்னா என்ற ஜூகிப் முன்னா (வயது 32) என்றுதெரிந்தது. இவர், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. சிரியா நாட்டில் இளைஞர்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை, பெங்களூரு உள்பட தென்னிந்தியாவில் வசிக்கும் இளைஞர்களிடம் ஜூகிப் முன்னா காட்டி வந்துள்ளார்.

அந்த வீடியோக்கள் மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சேர்த்து விடும் வேலையில் ஜூகிப் முன்னா ஈடுபட்டு வந்துள்ளார். ஏராளமான இளைஞர்களை சிரியாவுக்கு அவர் அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக 10-க்கும் மேற்பட்ட இஞைர்களை மூளைச்சலவை செய்து சிரியாவுக்கு ஜூகிப் முன்னா அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தீவிர விசாரணை

பெங்களூருவில் கடந்த ஆண்டு (2020) ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக டாக்டரான அப்துர் ரகுமானை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இவர், சிரியாவுக்கு சென்று பயங்கரவாதிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. அப்துர் ரகுமான் கைதான பின்பு பெங்களூருவில் பதுங்கி இருக்கும், அவரது கூட்டாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது ஜூகிப் முன்னாவும் கைதாகி உள்ளார்.

கைதான ஜூகிப் முன்னாவை பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு உள்ள தொடர்பு, வேறு ஏதேனும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டாரா?, சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ள இளைஞர்கள் உள்ளிட்டவை  குறித்து ஜூகிப் முன்னாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் பயங்கரவாதி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story