முட்டைக்கோஸ் அறுவடை தீவிரம்


முட்டைக்கோஸ் அறுவடை தீவிரம்
x
தினத்தந்தி 19 Nov 2021 7:29 PM IST (Updated: 19 Nov 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் முட்டைக்கோஸ் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி

தொடர் மழையால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் முட்டைக்கோஸ் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மலைக்காய்கறிகள்

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு அடுத்தப்படியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், மேரக்காய், நூல்கோல், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. 

இவ்வாறு விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து, விற்பனைக்காக உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அங்கிருந்து மாநிலத்தின் உள்பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

முட்டைக்கோஸ் அறுவடை

கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு இருந்தது. கடந்த 2 வாரங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த முட்டைக்கோஸ் பயிர்கள் அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

எனவே முட்டைக்கோஸ்களை அறுவடை செய்து விற்பனை செய்வதற்காக மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரியில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முட்டைக்கோஸ் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. போதுமான கொள்முதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

விவசாயிகளுக்கு நஷ்டம்

இதுகுறித்து கட்டபெட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்ட இன்னல்களை எதிர்கொண்டு வங்கிக்கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம்.

முட்டைக்கோஸ் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய்க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவிற்கு கட்டுப்படியாக வாய்ப்பு உள்ளது.  ஆனால் கொள்முதல் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story