கொடைக்கானல் மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு


கொடைக்கானல் மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 8:05 PM IST (Updated: 19 Nov 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலை வெயில் அடித்தது. இருப்பினும் பிற்பகலில், மேக மூட்டங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து மாலை 3 மணி முதல் சுமார் 1 மணிநேரம் நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. 
இதனிடையே வனப்பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக வத்தலக்குண்டு சாலையில் பெருமாள்மலை அருகே உள்ள டைகர் சோலை என்ற இடத்தில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த மலைப்பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுகுறித்து தகவலறிந்த ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. மழை காரணமாக கடும் குளிர் நிலவியது. இந்நிலையில் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக இருந்தது. அவர்கள் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர்.


Next Story