ஜாமீனில் வந்த டிரைவர், சுற்றுலா வேன் திருடிய வழக்கில் மீண்டும் கைது
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த டிரைவர், வேளாங்கண்ணியில் சுற்றுலா வேன் திருடிய வழக்கில் மீண்டும் கைதானார்.
வேளாங்கண்ணி:
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த டிரைவர், வேளாங்கண்ணியில் சுற்றுலா வேன் திருடிய வழக்கில் மீண்டும் கைதானார். .
சுற்றுலா வேன் திருட்டு
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் மடப்புரம் தென்பாதி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் சுரேந்தர்(வயது 32).இவர் சொந்தமாக சுற்றுலா வேன் வைத்து வேளாங்கண்ணியில் வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த 16-ந் தேதி இரவு இவர் வழக்கம் போல் வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் தனது வேனை நிறுத்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது நிறுத்தி இருந்த இடத்தில் வேனை காணவில்லை. தனது வேன் மாயமானது குறித்து சுரேந்தர், வேளாங்கண்ணி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுற்றுலா வேனை திருடி சென்றவர்களை தேடி வந்தனர்.
சென்னை ஆம்புலன்ஸ் டிரைவர்
இந்த நிலையில் வேளாங்கண்ணி அருகே வடவூர் தென்பாதி பகுதியில் உள்ள கருவைதோப்பு அருகே ஒரு வேன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது மாயமான சுரேந்தரின் வேன் அங்கு நின்றது தெரிய வந்தது. அந்த வேன் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், சென்னை தண்டையார்பேட்டை அம்மணி அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தர்(35) என்பதும், அவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர்கள் ஓசூரில் தங்கியுள்ளனர்.
கஞ்சா கடத்தல்
கடந்த மார்ச் மாதம் சுந்தரும், அவரது நண்பர்கள் சென்னையை சேர்ந்த மகேந்திரன் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேரும் ஆம்புலன்சில் வேதாரண்யத்துக்கு கஞ்சா கடத்தி வந்தபோது நாகை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 3 பேரையும் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு 3 பேரும் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியில் வந்து நாகை போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளனர். இதனால் மகேந்திரன், விக்னேஷ் ஆகிய இருவரும் நாகையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி கையெழுத்திட்டு வந்தனர்.
வேனை திருடிச்சென்றார்
சுந்தரிடம் பணம் இல்லாததால் அவர் வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கியிருந்து நாகையில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வேளாங்கண்ணியில் தங்கியிருந்தபோது சுந்தரின் மகனுக்கு நாய் கடித்து விட்டதாக தகவல் வந்துள்ளது.
உடனடியாக ஊருக்கு செல்ல தன்னிடம் பணம் இல்லாததால் வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுரேந்தரின் வேனை சுந்தர் திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் சாவி மட்டும் இருந்துள்ளது. இதனால் சுந்தர் வேனை திருடிக்கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார்.
கைது
தன்னை போலீசார் எப்படியும் பிடித்து விடுவார்கள் என முடிவு செய்த சுந்தர் மீண்டும் அந்த வேனை வேளாங்கண்ணிக்கு ஓட்டி வந்துள்ளார். வேளாங்கண்ணி அருகே வடவூர் தென்பாதி காட்டுகருவை தோப்பு அருகே அந்த வேனை நிறுத்தி உள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் வேன் நிற்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சுந்தரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து வேனை மீட்டனர்.
Related Tags :
Next Story