துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் தேனி மாணவ-மாணவிகள்


துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் தேனி மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 19 Nov 2021 9:58 PM IST (Updated: 19 Nov 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்வதற்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேனி:
துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்வதற்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கல்வி சுற்றுலா
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆன்லைன் மூலம் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்தபடி இந்த வினாடி-வினா போட்டிகளில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 
இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளை தேர்வு செய்து துபாய் நாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 86 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 4 மாணவ, மாணவிகள் தேர்வாகி உள்ளனர்.
4 பேர் தேர்வு
முத்தனம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.லத்திகா, வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.யோகவிக்னேஷ், ஸ்ரீரெங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கே.பனிமொழி, மார்க்கையன்கோட்டை அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.மாணிக்கம் ஆகிய 4 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
இந்த 4 மாணவ-மாணவிகள் அவர்களின் பெற்றோரின் விருப்பத்துடன் வருகிற டிசம்பர் மாதம் துபாய்க்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்காக இந்த மாணவ-மாணவிகளுக்கு பாஸ்போர்ட் எடுப்பது மற்றும் போக்குவரத்து, உணவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே செய்யும். தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story