திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி தாளாளர் கைது செய்யக்கோரி அடுத்தடுத்து நடந்த மறியலால் பரபரப்பு


திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி தாளாளர்  கைது செய்யக்கோரி அடுத்தடுத்து நடந்த மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 10:05 PM IST (Updated: 19 Nov 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி தாளாளரை கைது செய்யக்கோரி மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே பழனி ரோட்டில் முத்தனம்பட்டி அடுத்த மல்லனம்பட்டியில் ஒரே வளாகத்தில் சுரபி என்ற தனியார் கேட்டரிங் கல்லூரி, நர்சிங் கல்லூரி, பாரா மெடிக்கல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கும் விடுதியில்(ஆஸ்டல்) சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியின் தாளாளராக திண்டுக்கல்லை சேர்ந்த ஜோதி முருகன் உள்ளார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்ச்செல்வியிடம் நேற்று புகார் கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பாலியல் தொல்லை
சுரபி கல்லூரி வளாகத்தில் கடந்த 13-ந்தேதி குழந்தை திருமண தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்திய அலங்கார உடைகளை இன்று(நேற்று) காலை தாளாளர் ஜோதி முருகனிடம் அவரது அறையில் கொடுக்க சென்றேன். என்னுடன் மேலும் 2 மாணவிகள் உடன் வந்தனர். அப்போது அவர் உடன் வந்த மாணவிகள் 2 பேரையும் வெளியே செல்லுமாறு கூறிவிட்டு என்னை மட்டும் உள்ளே இருக்குமாறு கூறினார். அதன் பின்னர் அவர் எனது உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் ஆடைகளை அவிழ்க்க முயற்சி செய்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து தப்பி வெளியே ஓடி வந்து விட்டேன். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த 2 மாணவிகளிடம் எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறினேன். அப்போது அவர்கள் எங்களுக்கும் இதுபோன்று கல்லூரி தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார் என்று கூறினர். 
விடுதி வார்டன்
உடனே நான் இதுபற்றி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் பிற மாணவிகளிடம் கூறினேன். அப்போது அவர்கள் தங்களுக்கும் இது போன்று பாலியல் தொல்லை நடந்ததாக கூறினர். இது ெதாடர்பாக மாணவிகள் கல்லூரி விடுதி வார்டன் அர்ச்சனாவிடம் புகார் செய்து உள்ளனர். ஜோதிமுருகனின் பாலியல் தொந்தரவுக்கு விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருக்கிறார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். 
இதையடுத்து மாணவி புகாரின் பேரில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் விடுதி வார்டன் அர்ச்சனா ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
சாலைமறியல்
இதனிடையே தாளாளர் மூலம் மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை சுரபி கல்லூரியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மாணவ, மாணவிகள் வெகுண்ெடழுந்து தாளாளர் ஜோதிமுருகனை கைது செய்ய வலியுறுத்தி முத்தனம்பட்டி ெரயில் ரோடு அருகே நேற்று காலை 11 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், தாளாளரையும், விடுதி வார்டனையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர். சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக நடந்த இந்த சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தாடிக்கொம்பு போலீசார் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் சமாதான முயற்சியை மாணவ, மாணவிகள் புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து திண்டுக்கல்-பழனி சாலையில் முத்தனம்பட்டி ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசி செல்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவ, மாணவிகள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். மேலும் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், விடுதி வார்டன் அர்ச்சனா ஆகியோரை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். 
விடுதி வார்டன் கைது
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ,மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கல்லூரி தாளாளரையும், விடுதி வார்டனையும் கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் விடுதி வார்டன் அர்ச்சனாவை போலீசார் கைது செய்து  தாடிக்கொம்பு போலீஸ்நிலையத்தில் வைத்து இருந்தனர். அவர் ைகது செய்யப்பட்டது குறித்து செல்போனில் ‘வீடியோ கால்’ மூலம் மாணவர்களிடம் போலீசார் காண்பித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரி வளாகத்திற்குள் சென்றனர். அப்போது அவர்கள் மாலை 6 மணிக்குள் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை கைது செய்யவில்லை என்றால் நாங்கள் மீண்டும் மறியலில் ஈடுபடுவோம் என நிபந்தனை விதித்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
டி.ஐ.ஜி. விஜயலட்சுமி
இந்தநிலையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மாலை 6 மணி வரை கைது  செய்யப்பட வில்லை. இதுபற்றி அறிந்ததும் மாணவ, மாணவிகள் மீண்டும் முத்தனம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயலட்சுமி, திண்டுக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி லதா, திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசி செல்வி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளைக்குள்(இன்று) கல்லூரி தாளாளர் கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் மாணவ-மாணவிகள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
உடல்நலம் பாதித்த மாணவிகள்
இதனிடையே கல்லூரி தாளாளர் மீது புகார் கொடுத்த மாணவி உட்பட 3 மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story