பொள்ளாச்சியில் கயிறு வாரிய அலுவலக கட்டிடம் கட்டுவது எப்போது


பொள்ளாச்சியில் கயிறு வாரிய அலுவலக கட்டிடம் கட்டுவது எப்போது
x
தினத்தந்தி 19 Nov 2021 10:28 PM IST (Updated: 19 Nov 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் கயிறு வாரிய அலுவலக கட்டிடம் கட்டுவது எப்போது

பொள்ளாச்சி
அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகியும் கயிறு வாரியத்துக்கு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு தாமதமானதால் நிதி திரும்ப சென்றது.

கயிறு வாரிய அலுவலகம்

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரம் அதிகளவில் உள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் 350 தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. 

இங்கிருந்து ஆண்டுக்கு ரூ.2500 கோடிக்கு மேல் தென்னை நார் தொடர்பு டைய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தென்னை நார் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் கயிறு வாரிய மண்டல அலுவலகம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் செயல்பட்டு வருகிறது. 

சொந்த கட்டிடம் இல்லாததால் வாடகை கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டிடம் கட்ட திப்பம்பட்டியில் கடந்த 1988-ம் ஆண்டு இடம் வாங்கப்பட்டது. அதன்பிறகு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்காததால் பணிகள் தொடங்காமல் இருந்தது.

அடிக்கல் நாட்டு விழா

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி திப்பம்பட்டியில் புதிய கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டப் பட்டது. மத்திய கயிறு வாரியத்திற்கு சொந்தமான 5.5 ஏக்கர் இடத்தில் 408 சதுரமீட்டர் பரப்பளவில் தரை மற்றும் முதல் தளம் ரூ.7 கோடியே 4 லட்சத்தில் புதிய அலுவலக கட்ட திட்ட மிடப்பட்டது. கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பணிகள் தொடங்கவில்லை. மேலும் போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கல் நாட்டப்பட்ட கல்வெட்டுகள் உடைந்து வீணாகி வருகிறது. 

நிதி திரும்ப சென்றது 

இது குறித்து தென்னை நார் உற்பத்தியாளர்கள் கூறும்போது, சொந்த கட்டிடம் கட்டுவதற்கு இடவசதி மற்றும் நிதி இருந்தும் பணிகள் தொடங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் தற்போது செயல்பட்டு வரும் கட்டிடத்திற்கு மாதம் ரூ.25 ஆயிரம் வரை வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.

 அதுபோன்று பணிகள் தாமதமானதால் நிதி திரும்பி சென்று விட்டது. எனவே மீண்டும் நிதியை பெற்று புதிய கட்டிட பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றனர். 

இதுகுறித்து கயிறு வாரிய உறுப்பினர் கவுதம் கூறும்போது, கொரோனா காலம், இட பிரச்சினை காரணமாக கட்டிட பணிகள் தாமதமாகி வந்தது. வருகிற பட்ஜெட் தொடரில் மீண்டும் நிதியை பெற்று கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story