கெடிலம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு பாலூர்- நடுவீரப்பட்டு பாலத்துக்கு மேல் சென்ற தண்ணீர் போக்குவரத்துக்கு தடை


கெடிலம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு பாலூர்- நடுவீரப்பட்டு பாலத்துக்கு மேல் சென்ற தண்ணீர்  போக்குவரத்துக்கு தடை
x
தினத்தந்தி 19 Nov 2021 5:30 PM GMT (Updated: 19 Nov 2021 5:30 PM GMT)

கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலூர்-நடுவீரப்பட்டு பாலத்துக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம், 

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று, நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் - நடுவீரப்பட்டு கெடிலம் ஆறு குறுக்கே உள்ள பாலத்தை தண்ணீர் தொட்டப்படி சென்றது. மதியம் 2 மணிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து, பாலத்திற்கு மேல் பகுதியின் வழியாக தண்ணீர் செல்ல தொடங்கியது.


இதுபற்றி அறிந்த நடுவீரப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் பாலத்தின் இருபுறமும் இரும்பு தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்தனர்.

பஸ்சை நிறுத்தினர் 

அப்போது கடலூரிலிருந்து நடுவீரப்பட்டு நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை போலீசார் பாலூரில் நிறுத்தினர். பின்னர், அதில் வந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை இறங்கி அனைவரையும் பாதுகாப்புடன் பாலத்தின் வழியாக அழைத்து சென்று விட்டனர். 

பின்னர்,  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் பாலத்தில் செல்லக்கூடாது என எச்சரிக்கை பேனர்களுடன், தடுப்புகளையும் ஏற்படுத்தினர்.

இதற்கிடையே கெடிலம் வெள்ளத்தால் சி.என்.பாளையம் கரையோரம் இருந்த சுமார் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு பயிர் செய்யப்பட்டு இருந்த நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் என்று சுமார் 200 ஏக்கர் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

Next Story