மாணவ- மாணவிகளுக்கு பாரம்பரிய கலைப்பயிற்சிகள்
கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் 2 ஆண்டுக்கு பிறகு ராமநாதபுரத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மீண்டும் இன்று முதல் பாரம்பரிய கலைப்பயிற்சிகள் தொடங்கப்படுகிறது.
ராமநாதபுரம்,
கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் 2 ஆண்டுக்கு பிறகு ராமநாதபுரத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மீண்டும் இன்று முதல் பாரம்பரிய கலைப்பயிற்சிகள் தொடங்கப்படுகிறது.
கலைபயிற்சி
தமிழக அரசு கலைபண்பாட்டுத்துறை சார்பில் பள்ளி மாணவ - மாணவிகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாட்களை பயன் உள்ளதாக மாற்றிக்கொள்ளும் வகையில் பாரம்பரிய கலைப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.
ராமநாதபுரம் அரசு இசைப்பள்ளி வளாகத்தில் கலை பண்பாட்டுதுறை மற்றும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பில் இந்த பாரம்பரிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலமான கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று (20-ந் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் 6 வயது முதல் 16 வயதிற்குஉட்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். இவர்களுக்கு வாய்ப்பாட்டு (குரலிசை), பரதநாட்டியம், ஓவியம் மற்றும் சிலம்பம் ஆகிய கலைகள் கற்றுத்தரப்படும். வாரந்தோறும் சணிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
போட்டி
இதில் பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளை புதுடெல்லி தேசிய பாலபவன் மூலமாக நடத்தப்படும் போட்டியில் பங்குபெற செய்து அதில் தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகள் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். இதில் வெற்றி பெற்றால் இளந்தளிர் விருது இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படும். இதுதவிர, மாவட்ட அளவில் கலை போட்டிகள் நடத்தப் பட்டு அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாநில அளவிலான கலைப் போட்டிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள்.
காலாண்டு தேர்வு விடுமுறையில் கைவினை கலை பயிற்சி முகாமும், அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாரிக்கால கலை பயிற்சி முகாமும், முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் மாவட்ட அளவில் 10 நாட்கள் பயிற்சி முகாமும், மாநில அளவில் கோடைகால பயிற்சி முகாமும் நடத்தப்படுகிறது.
விண்ணப்பம்
எனவே, ராமநாதபுரத்தில் நடைபெறும் இந்த பாரம்பரிய கலை பயிற்சி வகுப்பில் பள்ளிக்குழந்தைகள் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சியில் சேர ஆண்டு கட்டணம் ரூ.200 மற்றும், விண்ணப்ப கட்டணம் ரூ.5 மட்டும் செலுத்தி தமிழர்களின் பாரம்பரிய கலைபயிற்சிகளை விடுமுறை தினங்களில் பயின்று இளந்தளிர் விருது பெறலாம். கொரோனா காலகட்டத்தில் விளையாட்டுகள், பாரம்பரிய பயிற்சிகளை பெறமுடியாமல் போன நிலையில் தற்போது மீண்டும் பயிற்சிகள் தொடங்க உள்ளதை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த தகவலை கலை பண்பாட்டுதுறை திட்ட இயக்குனர் செந்தில்குமார், திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story