இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. அடைந்த தோல்வியே வேளாண் சட்டங்களை திரும்ப பெற காரணம் கடலூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி
இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. அடைந்த தோல்வியே வேளாண் சட்டங்களை திரும்ப பெற காரணம் என கடலூரில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடலூர்,
கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளத்தால் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் நகர பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோர கிராம பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதுபற்றி அறிந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நேற்று மாலை கடலூர் வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகம் எதிரே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்திருந்ததை பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைவெள்ளத்தால் கடலூர் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது எதிர்பாராதது என்றாலும் கூட, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும். மாநில அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.
நகர பகுதியாக மாறும்...
விளைநிலங்கள் அனைத்தும் நகர பகுதியாக மாறும் போது அந்த பகுதிகளை மேடாக்குவதில்லை. இதனால் மழைக்காலங்களில் நகர பகுதிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றன. தென்பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் முன்அறிவிப்பு வழங்காமல் இருந்திருந்தால், அது மிகப்பெரிய தவறாகும்.
விவசாயிகள் கடந்த 18 மாதமாக போராடியதன் விளைவாக மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றுள்ளது. இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. அடைந்த தோல்வியே இந்த சட்டங்களை திரும்பப்பெற காரணம். விவசாயிகள் மீதான அக்கறை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், நகர தலைவர் வேலுசாமி, பொதுக்குழு உறுப்பினர் என்.குமார், மாவட்ட சிறப்பு அழைப்பாளா் ரங்கமணி, மாவட்ட பொருளாளா் ரமேஷ், ஊடக பிாிவு ரவிக்குமாா், செயலாளர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story