திருக்கோவிலூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின


திருக்கோவிலூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின
x
தினத்தந்தி 19 Nov 2021 11:15 PM IST (Updated: 19 Nov 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகவும், ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதாலும் திருக்கோவிலூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.

திருக்கோவிலூர், 

வடகிழக்கு பருவ மழையின் காரணமாகவும், சாத்தனூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது. கடந்த 1972-ம் ஆண்டு தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 218 அடி தண்ணீர் சென்றது. அதன்பிறகு தற்போதுதான் அதிகளவு தண்ணீர் செல்கிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
இந்த மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாகவும், ஆறுகளில் வெள்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்திருந்த பயிர்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. பல்வேறு தரைப்பாலங்களையும் வெள்ளம் மூழ்கடித்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் பார்வையிட்டார் 

இது பற்றி தகவல் அறிந்ததும் தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மணலூர்பேட்டைக்கு வந்தார். இவரை தி.மு.க. மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் கட்சியினர் வரவேற்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச்சென்றனர். 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக்குழு தலைவர்கள் ரிஷிவந்தியம் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், திருக்கோவிலூர் அஞ்சலாட்சி அரசகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேச்சல்கலைச்செல்வி துரைமுருகன், மணலூர்பேட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜெய்கணேஷ், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் மேலந்தல் பாரதிதாசன், பெருமாள், ராஜேந்திரன், அய்யனார், வீரட்டகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதிராமமூர்த்தி, தேவியகரம் தி.மு.க. நிர்வாகி சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story