வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம் கடலூர் தென்பெண்ணையாற்று கரையில் உடைப்பு; 6 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது வெள்ளத்தில் சிக்கிய 32 மாணவிகள் மீட்பு- 10 ஆயிரம் பேர் முகாமில் தங்கவைப்பு


வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம் கடலூர் தென்பெண்ணையாற்று கரையில் உடைப்பு; 6 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது  வெள்ளத்தில் சிக்கிய 32 மாணவிகள் மீட்பு- 10 ஆயிரம் பேர் முகாமில் தங்கவைப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 11:18 PM IST (Updated: 19 Nov 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் தென்பெண்ணையாறு வழியாக வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையில் உடைப்பு ஏற்பட்டு 6 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கிய 32 மாணவிகள் மற்றும் 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர், 

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்  அடைமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. பின்னர் நேற்று காலை முதல் மழை ஓய்ந்து, வெயில் தலைகாட்ட தொடங்கியது.

இதனால் கெடிலம், தென்பெண்ணையாறு, பரவனாறு, மணிமுக்தா, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கரையோரம் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. 

வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம் 

கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் சென்றது. இதற்கிடையே  சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. 

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்கள், ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளமும், தென்பெண்ணையாற்றில் கலந்தது. இதனால் நேற்று காலை தென்பெண்ணையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனால் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கும்தாமேடு தரைப்பாலம் தெரியாத அளவுக்கு இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடி, தாழங்குடாவில் வங்க கடலில் கலந்தது.

தென்பெண்ணையாற்று வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடிநீரை வெளியேற்றலாம். ஆனால் நேற்று காலை 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மாலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 524 கனஅடி தண்ணீா் செல்கிறது.

 இந்த வெள்ளத்திற்கே தென்பெண்ணையாற்றங்கரை தாக்குப்பிடிக்கவில்லை. பல இடங்களில் தென்பெண்ணையாற்றங்கரை நிரம்பி குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 

கரையில் உடைப்பு 

கடலூர் குண்டுசாலை, குமரப்பன் நகா் அருகில் உள்ள தென்பெண்ணையாற்றங்கரையில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு குமரப்பன் நகர், வெளிச்செம்மண்டலம், பெண்ணை நகா், குறிஞ்சி நகா், வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து ஓடி குடியிருப்புகளை சூழ்ந்தது. 

இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.இதனால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள், உடனே தங்கள் வீடுகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள முகாம்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்றனர். சிலர் வீட்டு மாடிகளில் தஞ்சமடைந்தனர். 

ஆற்றங்கரை பகுதி தனித்தீவானது 

குண்டுஉப்பலவாடி தியாகுநகரில் உள்ள தென்பெண்ணையாற்று கரையிலும் நேற்று காலை 10 மணி அளவில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெள்ளநீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

சாலைகள் அனைத்தும் ஆறாக மாறியதால், மக்கள் நடந்து கூட செல்ல முடியாதபடி வீடுகளுக்குள்ளே முடங்கினர். இதில் தியாகநகா், பூஞ்சோலைநகா், தாமோதர நகா், பரசுராமன்நகா், குண்டுஉப்பலவாடி, புதுத்தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. 

இதனால் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீட்டின் மாடி பகுதிக்கு சென்று தங்கியுள்ளனர். மேலும் பெரியகங்கணாங்குப்பம், சின்னங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, வேலன் நகர், முத்தையா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றங்கரையோர பகுதி வெள்ளத்தால் சூழ்ந்து தனித்தீவுபோல் காட்சி அளிக்கிறது. 

32 மாணவிகள் படகு மூலம் மீட்பு

கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விடுதியை விட்டு வெளியேற முடியாமல் 32 மாணவிகள், 4 பெண் ஊழியர்கள் தவித்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் படகுடன் விரைந்து சென்று, விடுதியில் சிக்கிய 32 மாணவிகள் மற்றும் 4 பெண் ஊழியர்களை படகு மூலம் பத்திரமாக மீட்டு வந்தனர்.

 பின்னர் அவர்களை வேன் மூலம், வன்னியர்பாளையத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

10 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைப்பு 

மேலும் குமரப்பன் நகர், வெளிசெம்மண்டலம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இவர்களையும் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் 5 படகுகளுடன் சென்று மீட்டனர். 

இவ்வாறாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேர்  குண்டுஉப்பலவாடி, பெரியகங்கனாங்குப்பம், சுபஉபலவாடி, கே.என்.பேட்டை, , வன்னியர்பாளையம், அழகியநத்தம், தியாகுநகர், உச்சிமேடு, கோண்டூர் உள்ளிட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

கெடிலம் ஆற்றிலும் வெள்ளம்

இதேபோல் கெடிலம் ஆற்றிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆறு வழியாக வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றலாம். ஆனால் நேற்று கெடிலம் ஆறு வழியாக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் இருகரைகளையும் தொட்டபடி பாய்ந்தோடியது. 

இதற்கிடையே நேற்று மாலை நிலவரப்படி கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தது. அதாவது வினாடிக்கு 48 ஆயிரத்து 921 கனஅடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

இதனால் கடலூர் புதுப்பாளையத்தில் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் வசித்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் அவர்களை மேடான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். 


Next Story